கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற கேரள உதவி இயக்குநர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சலகுடா எனும் பகுதியைச் சேர்ந்தவர் தீபு பாலகிருஷ்ணன்(வயது 41). இவர் மலையாள சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
மலையாளத்தில் வெளியான 'உரும்புகள் உறங்கரில்லா', 'ஒன்ஸ் இன் மைன்ட்' உள்ளிட்ட படங்களில் தீபு உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். மேலும், 'உரும்புகள் உறங்கரில்லா' படத்தில் நடித்தும் உள்ளார்.
நேற்று (அக்.10ஆம் தேதி) அதிகாலை 5 மணியளவில் இவர் இரிஞ்சகுலடா பகுதியில் உள்ள கோயில் குளம் ஒன்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் இவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் சந்தேகமடைந்த வீட்டினர் தீயணைப்பு துறையினரின் உதவியை நாடியுள்ளனர். தொடர்ந்து குளத்தில் தீபுவை தேடுகையில், அவரது உடையும் காலணியும் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து கோயில் குளத்தில் நீண்ட நேரம் தேடுதலுக்குப் பிறகு தீபுவின் உடல் மீட்கப்பட்டது.
முன்னதாக இவரது மறைவுக்கு கேரள திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பு அஞ்சலி தெரிவித்துள்ளது. கோயில் குளத்துக்கு குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பிற நடிகர்கள்
இதேபோல் முன்னதாக தமிழ் திரைப்பட நடிகர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர், ஜீவா தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (40), திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்து வந்தார்.
முன்னதாக ஷூட்டிங் முடித்துவிட்டு தனது பைக்கில் இவர் வீடு திரும்பிய நிலையில், செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஆலமரம் பகுதி அருகே சாலையை கடந்த போது, எதிரே பைக்கில் வந்த பம்மதுகுளம் எல்லையம்மன்பேட்டை கிராமத்தை சேர்ந்த சரவணன் (24), என்பவர் மீது நேருக்கு நேர் வேகமாக மோதினார்.
இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைகாக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல் விவசாயிகள் போராட்டத்தின்போது செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் திரைப்பட நடிகர் தீப் சித்து முன்னதாக சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அரியானா மாநிலம் சோனிபட் அருகே உள்ள குண்ட்லி-மனேசர்-பல்வால் எக்ஸ்பிரஸ் சாலையில் சுங்கச் சாவடி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது தீப் சித்து வந்த கார் வேகமாக மோதிய நிலையில், அவர் படுகாயமடைந்தார்.
தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.