கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், சினிமே தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. முன்னணி ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் படங்களும் கூட ஓடிடி ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்நிலையில், சுதந்தர தின விடுமுறையை முன்னிட்டு ஓடிடியில் சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.


அந்த வரிசையில், கார்கில் நாயகன் விக்ரம் பத்ராவின் பயோபிக்காக உருவாகி இருக்கும் ஷெர்ஷா திரைப்படம், அமேசான் ப்ரைமில் நேற்று வெளியானது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோர் இப்படத்தில் நடத்துள்ளனர். தமிழில் பட்டியல், பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விஷ்னுவர்தன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஹிந்தியில் இது அவருக்கு அறிமுகப்படம். திரைப்படம் வெளியாகி விமர்சனங்களைப் பெற்றும் வரும் நிலையில், ரியல் லைஃப் ஷெர்ஷாவான கேப்டன் விக்ரம் பத்ரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!



யார் இந்த கேப்டன் விக்ரம் பத்ரா?


1999 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போர் தாக்குதலில் போராடி, தன்னுடைய 24 வயதிலேயே வீர மரணமடைந்தவர் கேப்டன் விக்ரம் பத்ரா. போரின்போது, களத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் கேப்டன் பத்ராவை ‘ஷெர்ஷா’ என அழைத்துள்ளனர். அதுவே, படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. 


இமாச்சல் பிரதேச மாநிலம் பலம்பூரைச் சேர்ந்தவர் கேப்டன் விக்ரம் பத்ரா. காஷ்மீரில் கார்கில் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் கேப்டன் விக்ரம் பத்ராவுக்கு இடையான உரையாடல்கள் சுவாரஸ்யமானது. 



போர் களத்தில், ரேடியோ சிக்னல் வழியே உரையாடிய பாகிஸ்தான் வீரர்கள், “ஏய், ஷெர்ஷா.. இங்கே வந்தால், மிகவும் கடினமான சவாலான நேரத்தை நீ சந்திக்க நேரிடும். நீங்கள் தோற்றுப்போகப் போகிறீர்கள். உங்களை வீசி எறிய போகிறோம். அப்போது, உங்கள் நாட்டின் பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரை தூக்கிச் செல்ல போகிறோம்” என தெரிவித்துள்ளனர். 


அதற்கு ”முடியாது” என பதிலளித்து கொண்டே தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் கேப்டன் விக்ரம் பத்ரா. தாக்குதலில் தீவிரமாக சண்டையிட்டு கொண்டிருந்தபோது, குண்டுகளை வீசி எறிந்தபடி, “அன்போடு, மாதுரி தீக்‌ஷித்திடம் இருந்து” என கூச்சலிட்டுள்ளார். உடன் இருந்த இந்திய வீரரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் வழியில், கேப்டன் விக்ரம் பத்ரா கொல்லப்பட்டார். இது மறக்க முடியாத சம்பவமாக கார்கில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.


அவரது வீர மரணத்திற்கு பிறகு, உயரிய ராணுவ விருதான ‘பரம் விர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. இப்போது அவரது வாழ்க்கை சம்பவங்கள் அடங்கிய திரைப்படம் அமேசான் ப்ரைமில் இன்று வெளியாகியுள்ளது.