நெட்டிசன்களின் மீம் கண்டெண்ட்களுக்கு யாருமே விதிவிலக்கு கிடையாது. அமெரிக்க அதிபர் தொடங்கி உள்ளூர் யூட்யூபர்கள் வரை அனைவருமே மீம் கிரியேட்டர்களின் ஜாலி கேலி கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். அந்த வகையில் தற்போதைய ஜாலி கேலி மெட்டீரியல் ஆகியிருக்கிறார் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர்.  அண்மையில் ஓணம் திருவிழா கொண்டாடுவதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்குச் சென்றவர் நிகழ்வில் தேங்காய் உடைத்துள்ளார். அவர் தேங்காய் உடைத்த புகைப்படம் ஆன்லைனில் பகிரப்பட்டது. அதைதான் தற்போது போட்டோஷாப் செய்து வைரலாக்கி வருகிறார்கள் மீம் கிரியேட்டர்கள்.



சசிதரூர் வீட்டு ஓணம் இந்த முறை கலாட்டாவாக இருந்தது எனலாம். தேங்காய் உடைத்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் வீட்டில் ஊஞ்சலாடும் வீடியோ ஒன்றையும் ஆன்லைனில் பகிர்ந்திருந்தார். அதில், ‘ஓணத்தன்று வீட்டில் இருக்கும் பெண்கள் ஊஞ்சலாடும் சடங்கு ஒன்று உண்டு. இந்த முறை நான் அதனைச் செய்தேன்’ எனப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவிலும் அவரது ஃபாலோயர்கள் சிரிப்பலையை ஏற்படுத்தியிருந்தனர். 



முன்னதாக அண்மையில்தான் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரண வழக்கில் அவரை டெல்லி விசாரணை நீதிமன்றம் விடுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 



கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டலில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து டெல்லி போலீசார் இந்த மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சசி தரூரும் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் மீது ஐபிசி 498-ஏ மற்றும் 306 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 2018ல் சசி தரூருக்கு பிணை கிடைத்தது. 


இதற்கிடையே வழக்கு விசாரணையில் சுனந்தா இறப்பதற்கு முன்பு அவருக்கு உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் வேண்டுமென்றே சசி தரூர் இந்த விவகாரத்தில் சேர்க்கப்பட்டு வழக்கு பெரிதுபடுத்தப்படுவதாகவும் தரூர் தரப்பில் கூறப்பட்டது. 


இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல் இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில் வழக்கிலிருந்து தரூரை விடுவிப்பதாகத் தீர்ப்பளித்தார்.


இந்த விசாரணையில் காணொளி வழியாக ஆஜரான தரூர் ஏழரை ஆண்டுகாலமாகத் தனக்கு ஏற்பட்ட மன உளச்சலில் இருந்து விடுதலை கொடுத்த நீதிபதிக்கும் நீதிமன்றத்துக்கும் நன்றி தெரிவித்தார். இதற்கிடையேதான் தற்போது தரூரின் ஓணம் வீடியோ வைரல் ஆகி வருகிறது. சசிதரூர் அவ்வப்போது இப்படி தான் ஏதாவது ஒரு வகையில் பேசும் பொருளாவார்.