பிரபல நடிகர் சர்வானந்துக்கும் அவரது நீண்ட நாள் காதலி ரக்‌ஷிதாவுக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது.


தெலுங்கில் தொடங்கி தமிழ் மொழியிலும் அனைவராலும் அறியப்படும் நடிகராக வலம் வருபவர் நடிகர் சர்வானந்த். கோலிவுட்டில் ‘எங்கேயும் எப்போதும்’ ‘ஜேகே எனும் நண்பனின் கதை’ ஆகிய படங்களில் நடித்துள்ள சர்வானந்த்,  ‘காதல்னா சும்மா இல்லை’ எனும் தெலுங்கு டப்பிங் படத்தில் இடம்பெற்ற ‘என்னமோ செய்தாய் நீ’ பாடல் மூலமும் பிரபலமானார்.


எனினும் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் திரைப்படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வரும் சர்வானந்தின் நடிப்பில் அண்மையில்  ‘கணம்’ எனும் திரைப்படம் தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்றது.  வணிக குடும்ப பின்புலத்தைக் கொண்டிருக்கும் சர்வானந்தும் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியும் உறவுக்காரர்கள் ஆவர்.


தெலுங்கு சினிமாவில் பல காதல் படங்களை நடித்து ரசிகர்களைக் கொண்டிருந்த சர்வானதுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில் 38 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த சர்வானந்த நீண்ட நாள்களாக ஒருவரைக் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. அதன்படி, சர்வானந்த் கடந்த ஜனவரி மாதம் தான் ரக்‌ஷிதா எனும் பெண்ணை மணப்பதாக அதிகாரப்பூர்வமாக தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.


ஆந்திர மாநிலம், ஸ்ரீ காளகஸ்தி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக ஐந்து முறை பதவி வகித்த மறைந்தவரும் ஆமைச்சருமான போஜல கோபால கிருஷ்ணா ரெட்டியின் பேத்தி தான் இந்த ரக்‌ஷிதா. இந்நிலையில், தொடர்ந்து அவரது திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் சர்வானந்த் விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.


கடந்த மே 28ஆம் தேதி, ஹைதராபாத் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து நடிகர் சர்வானந்தின் கார் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.அதனைத் தொடர்ந்து சர்வானந்துக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


திருமணத்துக்கு ஒரு வாரம் இருந்த நிலையில் சர்வானந்த் விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்திய நிலையில் தான் நலமுடன் இருப்பதாக சர்வானந்த் அறிவித்தார்.


இந்நிலையில் திட்டமிட்டபடி நேற்று சர்வானந்தின் திருமண நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஜெய்ப்பூரில் இன்று சர்வானந்தின் திருமணம் நடைபெறும் நிலையில், ஹல்தி விழாவில் நேற்று மஞ்சள், சந்தனம் பூசி குடும்பத்தார் மகிழும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.


 






இன்று இவர்களது திருமணம் நெருங்கிய நண்பர்கள்,  திரைத்துறையினர் சூழ நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.