ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான யாத்ரா 2 ரிலீசாகியுள்ள நிலையில் தியேட்டரில் தொண்டர்களிடையே அடிதடி மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி உள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மாநில முதலமைச்சராக உள்ளார். இதனிடையே வரும் மே மாதம் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. அதனுடன் ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.
இதனை முன்னிட்டு அம்மாநிலத்தில் இப்பவே தேர்தல் திருவிழாவின் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம், பாஜக, காங்கிரஸ், ஜனசேனா கட்சி என பலமுனை போட்டிகள் அம்மாநிலத்தில் நிலவுகிறது. இப்படியான நிலையில் அங்கு “யாத்ரா 2” என்ற படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறப்புக்குப் பின் ஜெகன்மோகன் ரெட்டியின் எழுச்சி, யாத்திரை, அவரின் வெற்றி என படம் முழுக்க உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக “யாத்ரா” என்ற படம் அமைந்தது. இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வெளியானது. இதில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படியான நிலையில் யாத்ரா 2 படத்தில் ஜெகன் மோகன் வேடத்தில் நடிகர் ஜீவா நடித்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யாத்ரா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதேசமயம் இந்த ட்ரெய்லரில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பிற கட்சிகளை பற்றியும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று படம் வெளியான நிலையில் அதில் காங்கிரஸ், ஜனசேனா உள்ளிட்ட பிற கட்சிகளை விமர்சித்து காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தியேட்டரில் அக்கட்சியின் தொண்டர்கள் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் கைக்கலப்பாக மாறிய நிலையில் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் தியேட்டரில் நடைபெற்ற மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.