மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மொழி கடந்து ரசிகர்களை ஈர்த்த கும்பளங்கி நைட்ஸ் படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கும்பலங்கி நைட்ஸ்
மலையாளத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியானப் படம் கும்பளங்கி நைட்ஸ். ஷேன் நிகம், சௌபின் ஷாஹிர், ஃபகத் ஃபாசில், ஸ்ரீநாத் பாஸி, மேதியு தாமஸ், அன்னா பென், ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சுஷின் ஷியாம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வெகு குறைந்த பொருட்செலவில் உருவாகி மலையாளத்தில் வெளியான இப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக மாறியது,
கேரளாவின் மிக பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று கும்பளங்கி. பல்வேறு ஊர்களில் இருந்து வந்து இந்த ஊரின் அழகை மக்கள் ரசித்துவிட்டு செல்கிறார்கள். போர்ச்சுகீசியர்களின் கட்டடக்கலை, மீன் பிடித்தல், இரவில் ஊதா நிறத்தில் ஒளிரும் கடல் நீர், படகு சவாரி என சுற்றுலாப் பயணிகள் பார்த்து பார்த்து ரசிக்கும் இந்த கும்பளங்கி அதே ஊரில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு அண்ணன் தம்பிகளுக்கு அவ்வளவு இனிமையானதாக இல்லை.
பாபி (ஷேன் நிகம்) சாஜி (செளபின் ஷாஹிர்) போனி (ஸ்ரீநாத் பாஸி) ஃப்ராங்கி ( மேத்யு தாமஸ்). சாஜியின் தந்தையும் போனியின் தாயை மறுமணம் செய்துகொள்கிறார். இதனைத் தொடர்ந்து பாபி மற்றும் ஃப்ராங்கி என இரண்டு மகன்களைப் பெற்றெடுக்கிறார் போனியின் அம்மா. தனது கணவன் இறந்ததும் தனது மூத்த மகனை குடும்பப் பொறுப்புகளைப் பார்க்கச் சொல்லிவிட்டு கன்னியாஸ்திரியாக மாறிவிடுகிறார். ஒருவருக்கும் ஒருவர் ஒற்றுமை இல்லாமல் வாழும் இந்த சகோதர்கள் மீண்டும் குடும்பத்தை கட்டமைப்பது எப்படி என்பது தான் கும்பளங்கி நைட்ஸ் படத்தின் மையக் கதை.
மறுபக்கம் வழக்கமான ஆண் என்கிற பிம்பத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும் ஷம்மி (ஃபகத் ஃபாசில்) கொஞ்சம் காமிக்கல் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும் இக்கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
மிக எளிமையான திரைமொழியில் மிக ஆழமான உணர்ச்சிகளைக் கடத்திய படம் கும்பளங்கி நைட்ஸ். தனது இளமைக் காலத்தில் குடும்பப் பொறுப்பு மொத்தமும் தன் மேல் விழுந்ததால் எப்போது குடித்துக் கொண்டே சோம்பேறியாக இருக்கிறார் ஷாஜி. தனக்குத் தேவையாக பனத்தை சம்பாதித்து தனிமை விரும்புவனாக இருக்கிறான் பாபி.
வாய் பேச முடியாத போனி எல்லாவற்றையும் விட்டு தனக்கென வேறு ஒரு நண்பர்கள் கூட்டத்தை வைத்துக் கொள்கிறான். இந்த நான்கு பேரில் இளையவனான ஃப்ராங்கி பள்ளி விடுமுறைக்கு விருப்பமில்லாமல் வீடு திரும்புகிறான்.
ஒவ்வொரு வகையில் தனிமைப்பட்டுக் கிடக்கும் இவர்களின் வாழ்க்கைக்கு அன்பு, காதல், நட்பு என ஏதோ ஒரு வகையில் அர்த்தம் கிடைக்கிறது. சுஷின் ஷியாம் இசையில் அமைந்த அனைத்துப் பாடல்களும் மனதை நெகிழ வைக்கக் கூடியவை!