தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகளில் அனைவரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு மிகவும் பிரபலமான கியூட் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி. நடிகர் அஜித் எவ்வளவு தான் பிஸியாக தனது சினிமா வாழ்க்கை, பைக் ரேஸ், கார் ரேஸ் என அவரின் கனவை பின்தொடர்ந்து சென்றாலும் ஒரு நாளும் குடும்பத்துக்கான நேரத்தை ஒதுக்க தவறியதே இல்லை. மனைவி ஷாலினி மற்றும் மகன் மகளுடன் அவ்வப்போது வெக்கேஷன் சென்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகும்.
தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார் அஜித்குமார்.
'விடாமுயற்சி' படப்பிடிப்பில் நிறுத்தப்பட்டது குறித்து பல வதந்திகள் எழுந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தான் மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் துவங்கியது என்ற தகவல் வெளியானது. ஒரு மாதம் காலம் மிகவும் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் திடீரென நடிகர் அஜித் சென்னை திரும்பி வந்தார். பர்சனல் விஷயத்துக்காக அவர் அவசரமாக சென்னை வந்ததாக சொல்லப்பட்டது.
அஜித் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்ததற்கு அவரின் மனைவி ஷாலினியின் உடல்நிலை தான் காரணம். ஷாலினிக்கு உடல்நலக்குறைவு காரணமாக மைனர் ஆபரேஷன் ஒரு செய்யப்பட்டுள்ளது. அஜித் அஜர்பைஜானுக்கு கிளம்புவதற்கு முன்னரே ஆபரேஷனுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு தான் கிளம்பினார் என்றாலும் மனைவியை பார்ப்பதற்காக சென்னை விரைந்துள்ளார். ஷாலினி அஜித் கையை பிடித்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. #shaliniAjithkumar என்ற ஹேஷ் டேக்குடன் ட்ரெண்டிங்காகி வருகிறது. ஷாலினி இப்போது நலமாக இருக்கிறார் அவருக்கு எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது என்ற தகவல் அறிந்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
மீண்டும் அஜித் அஜர்பைஜான் சென்று விடாமுயற்சி ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.