சக்திமான் தொடர் 200 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டுடன் திரைப்படமாக உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அந்தத் தொடரில் லீட் ரோலில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார்.


1997 காலக்கட்டத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சக்திமான் தொடரை பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்து அவரே சக்திமானாகவும் நடித்திருந்தார். இந்தி மொழியில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இந்தத் தொடர் திரைப்படமாக உருவாக உள்ளதாக முகேஷ் கண்ணா ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்கான 'Announcement' வீடியோவும் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. ஆனால் கொரோனா போன்ற காரணங்களால் படத்தின் வேலைகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.


இந்நிலையில் தற்போது 'சக்திமான்' தொடரை 200 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டுடன் திரைப்படமாக உருவாக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளதாக முகேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார்.


இது குறித்து அவர் கூறியதாவது: “சக்திமான் தொடர் திரைப்படமாக உருவாக உள்ளதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளசோனி பிக்சர்ஸ் நிறுவனம் 200 முதல் 300 கோடி வரையிலான பட்ஜெட்டில் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது.  கொரோனா தொற்று காரணமாகத் திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது”. என்று தெரிவித்திருந்தார்.


"நான் இதைச் சொல்லியாக வேண்டும். படத்தில் சக்திமான் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை. படக்குழுவினர் எந்த ஒப்பீடும் வேண்டாம் என்றதால் சிறப்புத் தோற்றத்திலும் நான் நடிக்கவில்லை. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். திரைப்படத்தில் யார், யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது பின்னர் தெரிவிக்கப்படும். இந்தத் திரைப்படம் வேறொரு தரத்தில் வித்தியாசமாக இருக்கும்” என்று முகேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார்.


1997 முதல் 2005-ம் ஆண்டு வரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சக்திமான் தொடர் 90’s கிட்களின் பேவரெட் தொடராக இருந்தது. இந்த தொடருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த சீரியலை பார்த்து விட்டு குழந்தைகள் சிலர் சக்திமான் வந்து காப்பாற்றுவார் என எண்ணி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சக்திமான் அந்த அளவிற்கு குழந்தைகளின் மனம்  கவர்ந்த சீரியலாக இருந்தது. அப்போது குழந்தைகளாக இருந்தவர்கள் இப்போது வளர்ந்து இளைஞர்களாக உள்ளனர். இந்நிலையில் சக்திமான் தொடர் திரைப்படமாக வெளியாக உள்ளதாக வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு 90'S கிட்களின் மத்தியில் நிச்சயம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த படம் எப்படி இருக்கும் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.