ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்‌ பள்ளிகளுக்கிடையேயான 3-வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்‌ வெற்றி பெற்ற பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ வாழ்த்து தெரிவித்து, அரியலூர்‌ மாவட்ட இருளர்‌ இன பழங்குடியின மக்களுக்கு முந்திரி சேகரம்‌ செய்யும்‌ உரிமைக்கான ஆணைகளை வழங்கினார்‌.


இந்த நிகழ்ச்சி சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


தமிழ்நாட்டில்‌ 36 பழங்குடி இனத்தைச்‌ சேர்ந்த 7,94,697 பழங்குடியின மக்கள்‌ வசித்து வருகின்றனர்‌. இது தமிழ்நாட்டின்‌ மொத்த மக்கள்‌ தொகையில்‌ 1.10 சதவீதம்‌ ஆகும்‌. இப்பழங்குடியின மக்களின்‌ மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றின்‌ ஒரு அங்கமாக, தமிழ்நாடு அரசு 320 பழங்குடியினர்‌ உண்டி உறைவிடப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்‌ பள்ளிகளை நடத்தி வருகிறது. இப்பள்ளிகளில்‌ 27,168 மாணவ, மாணவியர்கள்‌ தங்கி கல்வி பயின்று வருகின்றனர்‌.


மத்திய அரசின்‌ தேசிய பழங்குடியினர்‌ நல கல்விச்சங்கத்தின்‌ கீழ்‌ பழங்குடியினருக்காக 392 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள்‌ இந்தியா முழுவதும்‌ செயல்பட்டு வருகிறது. இவற்றில்‌ தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ - வெள்ளிமலை, சேலம்‌ மாவட்டம்‌ - அபிநவம்‌ மற்றும்‌ ஏற்காடு, நாமக்கல்‌ மாவட்டம்‌ - செங்கரை, திருவண்ணாமலை மாவட்டம்‌ - அத்திப்பட்டு, திருப்பத்தூர்‌ மாவட்டம்‌ - புதூர்நாடு, நீலகிரி மாவட்டம்‌ - மு.பாலடா மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்டம்‌ - குமிழி ஆகிய இடங்களில்‌ 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள்‌ மத்திய அரசு மற்றும்‌ தமிழ்நாடு அரசின்‌ நிதி பங்களிப்புடன்‌ செயல்பட்டு வருகிறது. இவற்றில்‌ 2606 மாணவ, மாணவிகள்‌ பயின்று வருகின்றனர்‌.


இப்பள்ளிகளில்‌ ஆங்கில வழியில்‌ தரமான கல்வியும்‌, ஊட்டச்சத்து மிக்க உணவும்‌, விளையாட்டு மற்றும்‌ கலாச்சார பிரிவுகளில்‌ சிறப்பு பயிற்சிகளும்‌ அளிக்கப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ 2018-2019 ஆம்‌ ஆண்டு முதல்‌ நடத்தப்பட்டுவருகிறது.


2022- 2023ஆம்‌ ஆண்டிற்கான 3-வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த மாணாக்கர்கள்‌ கலந்துகொள்ளும்‌ பொருட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ நேரடி கண்காணிப்பில்‌ பிரபலமான தேர்ந்த பயிற்சியாளர்களைக்‌ கொண்டு தீவிர பயிற்சிகள்‌ அளிக்கப்பட்டது. மேலும்‌, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்‌ நடத்தப்பட்டு 127 மாணவர்கள்‌ மற்றும்‌ 102 மாணவியர்கள்‌ தேசிய அளவிலான இப்போட்டிகளுக்காக பயிற்சி பெறும்‌ பொருட்டு தேர்வு செய்யப்பட்டனர்‌.


இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ நேரடி கண்காணிப்பில்‌ தமிழ்நாடு உடற்கல்வியியல்‌ மற்றும்‌ விளையாட்டு பல்கலைக்கழகத்தில்‌ இந்திய அளவில்‌ பிரபலமான தேர்ந்த விளையாட்டு பயிற்சியாளர்களைக்‌ கொண்டு வாலிபால்‌, கபடி, கால்பந்து, கைப்பந்து, கோகோ, குத்துச்சண்டை, சதுரங்கம்‌, நீச்சல்‌ மற்றும்‌ தடகள விளையாட்டுகளில்‌ ஊட்டச்சத்து மிக்க உயர்தர
உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன்‌ கூடிய சிறப்பான தீவிர பயிற்சிகள்‌ அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில்‌ கலந்து கொண்ட மாணவர்களில்‌ நன்கு தேர்ச்சி பெற்ற 94 மாணவர்கள்‌ மற்றும்‌ 83 மாணவியர்கள்‌, என மொத்தம்‌ 177 மாணவ, மாணவியர்கள்‌ தேசிய அளவிலான போட்டிகளில்‌ கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டனர்‌.


ஆந்திர மாநிலம்‌, குண்டூர்‌ மற்றும்‌ விஜயவாடாவில்‌ 17.12.2022 முதல்‌ 22.12.2022 வரை நடைபெற்ற 3-வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்‌ 22 மாநிலங்களைச்‌ சேர்ந்த 4000-க்கும்‌ மேற்பட்ட மாணவ, மாணவியர்கள்‌ கலந்து கொண்டனர்‌. இதில்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த 177 பழங்குடியின மாணவ, மாணவியர்கள்‌ பங்குபெற்றனர்‌.


இப்போட்டிகளில்‌ இதுவரை காணாத வகையில்‌ 10 தங்கம்‌, 27 வெள்ளி மற்றும்‌ 30 வெண்கலம்‌, என மொத்தம்‌ 67 பதக்கங்களை வென்று தமிழ்நாடு 5-வது இடத்தை பெற்று சாதனை படைத்தது.