தமிழ் திரையுலகில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் அட்லி. இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குநர் பட்டியலில் நுழைந்தார். அட்லி படங்களை இயக்குவது மட்டுமின்றி A for apple என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்தும் வருகிறார். இதனையடுத்து இயக்குநர் அட்லி அடுத்ததாக கோலிவுட் படத்தை இயக்காமல் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.


இந்நிலையில் அட்லி- ஷாருக்கான் இணைந்துள்ள புதிய திரைப்படத்தின் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. படம் தொடங்குவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் தொடர்பான ஷூட்டிங் இந்தியா, வெளிநாடு என பல இடங்களில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இந்தியாவில் சில நகரங்களை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி புனேவின் 10 நாட்கள் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. புனே மட்டுமின்றி, மும்பையிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை தவிர்த்து துபாயிலும் அங்குள்ள சில இடங்களிலும் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் பாலிவுட் கிங் காங் என அழைக்கப்படும் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஒரு கேரக்டரில் நடிக்க சான்யா மல்ஹோத்ரா நடிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. இவர் ஏற்கனவே ஆமீர்கானுடன் இணைந்து, தங்கல் படத்தில் நடித்திருந்தார். 


180 நாட்களில் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்க இயக்குநர் அட்லி முடிவு செய்து இருப்பதாகவும், பிரமாண்ட பட்ஜெட்டில் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் மட்டுமே நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்டால், நேரடியாக அவர் அறிமுகமாகும் முதல் பாலிவுட் படம்  இதுவாகும். அதேபோல் நயன்தாரா ஏற்கனவே அட்லி இயக்கிய, ராஜா ராணி, பிகில் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 




கிட்ட தட்ட இரண்டு ஆண்டுகளாக அட்லி- ஷாருக்கான் படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் உள்ளன. இறுதியாகச் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி படம் குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நாளிலும் அப்டேட் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். விரைவில் படம் குறித்து எதாவது ஒரு அப்டேட்டை இயக்குநர் வெளியிடுவார் என அவரது ரசிகர்களால் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.