பதான் பட வெற்றியைத் தொடர்ந்து ட்விட்டரில் தன் விருப்ப ஆக்டிவிட்டியான #askSrk ஹாஷ்டேக் மூலம் தன் ரசிகர்களுடன் உரையாடும் நிகழ்வை ஷாருக்கான் இன்று குதூகலத்துடன் மேற்கொண்டு வந்தார்.
அப்போது “காதல் இனம், மதம், மொழி, பிரதேசம் ஆகியவற்றைக் கடந்தது என்பதை பதான் நிரூபித்திருக்கிறது. பதானின் வெற்றி...இந்தியாவின் வெற்றி...இந்தியர்களை ஒன்றிணைக்க நீங்கள் இன்னும் அதிகமாக செய்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று அவரது ஷாருக்கானின் ரசிகர் ஒருவர் பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஷாருக், "நாம் அனைவரும் இந்தியாவின் குழந்தைகள். அதுதான் ஒரே உண்மை" என பதிலளித்துள்ளார். ஷாருக்கானின் இந்தப் பதிவு ட்விட்டரில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
பாலிவுட்டில் பலகட்ட பிரச்னைகளைத் தாண்டி ஜனவரி 25ஆம் தேதி வெளியான ஷாருக்கின் பதான் படம் இந்திய சினிமா வரலாற்றில் பல பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட்களை அடித்து நொறுக்கி சாதனை புரிந்து வருகிறது.
ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் கடந்த 2 ஆண்டுகளாக இறங்குமுகத்தில் பயணித்த நிலையில், பாலிவுட்டின் பாட்ஷாவாகக் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானால் தான் பாலிவுட் மீண்டெழும் என பலரும் ஆரூடம் தெரிவித்து வந்தனர்.
ஆனால் வழக்கம்போல் பாய்காட் பாலிவுட் பிரச்சினைகள் தலைத்தூக்கிய நிலையில், இப்படத்தின் பாடலில் தீபிகாவின் காவி நிற உடை எதிர்ப்புக்களை சம்பாதித்து இந்து அமைப்புகளின் கடும் கோபத்துக்கு ஆளாகி புயலைக் கிளப்பியது.
இவற்றையெல்லாம் கடந்து ஒரு வழியாக ஜன.25 வெளியான பதான் படம் ஷாருக்கானுக்கு சிறப்பான கம் பேக் படமாக அமைந்து மூன்றே நாள்களில் உலகம் முழுவதும் 313 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் முதல் மூன்று நாள்களில் இதுவரை அதிகம் வசூலித்த இந்தி படம் என்னும் சாதனையையும் புரிந்து கேஜிஎஃப் பட ரெக்கார்டையும் முறியடித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் முதல் நாளில் 70 கோடி வசூலித்த முதல் படம் எனும் சாதனையையும் பதான் படம் படைத்துள்ளது.
இந்நிலையில், குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் இப்படம் வெளியான நிலையில், தொடர்ச்சியாக வார இறுதியும் சேர்த்து ஐந்து நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வசூலில் படம் இன்னும் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள 'பதான்' படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.