ஷாருக்கான்


பதான் , ஜவான் என அடுத்தடுத்த மாபெரும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தற்போது ஷாருக் கான் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டங்கி’. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக் கான், டாப்ஸி, விக்கி கெளஷல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.


ஆங்கில மோகம் கொண்ட பஞ்சாப்  மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் தங்களது விடாப்பிடியான முயற்சியால் இங்கிலாந்து செல்கிறார்கள். இந்த ஐந்து நபர்கள் எதிர்பாராத விதமாக அகதிகளாக மாறி மறுபடியும் தங்களது தாய்நாட்டிற்கே திரும்பும் கதையாக டங்கி படம் இருக்கும் என்று சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரை வைத்து யூகிக்கலாம். 


ரசிகர்களின் கேள்விக்கு ஷாருக் பதில்


தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எக்ஸ் தளத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் கலகலப்பாக உரையாடி வருபவர் நடிகர் ஷாருக் கான். ‘ஆஸ்க் எஸ் ஆர் கே’ என்கிற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நகைச்சுவையாக, உணர்வுப் பூர்வமாக, சில நேரங்களில் கடுமையான வகையிலும் பதில் அளித்து வருகிறார் ஷாருக் கான். தற்போது இரண்டு நபர்களின் கேள்விகளுக்கு ஷாருக் கான் அளித்துள்ள பதில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


இன்னும் என்னால் அதே போல் ஓட முடிவதே மகிழ்ச்சிதான்


ரசிகர் ஒருவர் ஷாருக் கான் நடித்து 28 ஆண்டுகளுக்கு முன்வந்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தில் மழையில் இளமையான ஷாருக் கான் ஓடும் காட்சி ஒன்றையும், தற்போது அதே டீ ஷர்டை அணிந்து டங்கி படத்தின் ட்ரெய்லரின் ஓடும் காட்சியும் ஒன்றாக பதிவிட்டிருந்தார்.


இத்தனை ஆண்டு காலத்தை திரும்பிப் பார்க்கும்போது தான் எப்படி உணர்கிறார் என்று அந்த ரசிகர் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஷாருக் கான் “ வாழ்க்கை என்பதே ஒரு ஓட்டம்தான். என்னுடைய உடலில் 11 அறுவை சிகிச்சைக்குப் பின்னும் என்னால் அதே போல் ஓட முடிவதும் எனக்கு பிடித்த டீ ஷர்ட் எனக்கு மிகச்சரியாக பொருந்துவதுமே எனக்கு மகிழ்ச்சிதான்“ என்று அவர் பதிலளித்திருந்தார்.