Jawan: ஜவான் படத்தை பாராட்டிய அல்லு அர்ஜூனுக்கு நடிகர் ஷாருக்கான் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாராநடித்துள்ள ஜவான் திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வந்துள்ளது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை எடுத்த அட்லீ, முதன் முதலாக பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.


முதல் படத்திலேயே பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் எடுத்துள்ளதால் எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்டது. நயன்தாரா மற்றும் அனிருத் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானதாலும், விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதால் படத்தை பெரிதளவில் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இவர்களின் கூட்டணியில் தீபிகா படுகோனே இணைந்துள்ளார். 


படம் ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டிருப்பதால் திரைக்கு வந்த முதல் நாள் திருவிழாவை போல் கொண்டாடப்பட்டது. பாலிவுட் ரசிகர்கள் ஜவான் ரிலீஸை ட்ரோல் செய்து டிரெண்டாக்கி வந்தனர். திரைக்கு வந்த 8 நாட்களில் ரூ.700 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக் குவித்ததாக கூறப்படுகிறது. ஜவான் படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப் பிரபலங்களும் திரையரங்கில் பார்த்து வாழ்த்து கூறி வருகின்றனர். 


அந்த வகையில் ஜவான் படத்தை பார்த்த அல்லு அர்ஜூன் டிவிட்டர் (எக்ஸ்) பதிவு மூலம் ஷாருக்கானிற்கு வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “ஜவான் படம் இமாலய வெற்றி பெற்றதற்கு மிகப்பெரிய வாழ்த்து. ஷாருக்கானின் ஸ்வாக்-ஐ தாண்டி, இதுவரை இல்லாத அளவுக்கு ஜவான் படம் ஒட்டு மொத்த இந்தியாவையும் மயக்கியுள்ளது. உங்களின் மகிழ்ச்சியால் சந்தோஷப்படுகிறேன். உங்களுக்காக எப்பொழுதும் பிரார்த்திப்பேன்” எனக் கூறியுள்ளார். 


அல்லு அர்ஜூனின் இந்த வாழ்த்துப் பதிவால் நெகிழ்ந்த ஷாருக்கான் அவரது ட்விட்டர் பதிவை ரீபோஸ்ட் செய்ததுடன் அதில், “உங்களுடைய அன்புக்கு நன்றி. ஸ்வாக் என்று வரும்போது அந்த ஃபயரே என்னை பாராட்டுவது  வாவ்... எனது நாள் சிறப்பாகிவிட்டது. புஷ்பா படத்தை மூன்று முறை மூன்று நாட்களில் பார்த்துள்ளேன். உங்களிடம் இருந்து சிலவற்றை கற்றுக் கொண்டுள்ளேன். உங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பெரிய ஹக் கொடுப்பேன்” என கூறியுள்ளார். 






இப்படி மாஸ் நடிகர்கள் இருவரும் ட்விட்டரில் தங்களை புகழ்ந்து மாறி, மாறி பேசுவது திரைவட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.