இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி தன் கணவருடன் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டில் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் அழகி பட்டத்தை வென்றவர் நாக்பூரை சேர்ந்த காயத்ரி ஜோஷி. இதனைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு ஸ்வேட்ஸ் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டைப் பெற்ற இந்த படத்தில் அவர் நடிகர் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் அறிமுக நடிகைகக்கான சில விருதுகளையும் காயத்ரி ஜோஷி வென்றிருந்தார்.
ஆனால் அவர் மேற்கொண்டு எந்த படத்திலும் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு விலகிய காயத்ரி ஜோஷி, 2005 ஆம் ஆண்டு தொழிலதிபர் விகாஸ் ஓபராய் என்பவரை திருமணம் செய்து கொண்டார், மேலும் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் தற்போது இத்தாலியில் வசிக்கிறார். கடந்த ஆண்டு ஹிருத்திக் ரோஷன் மற்றும் சுசானே கானுடன் ஒரு சந்திப்பில் காயத்ரி ஜோஷி மற்றும் அவரது கணவர் இருவரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே 2019 ஆம் ஆண்டு கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.40,000ஐ இழந்ததற்காக தலைப்புச் செய்திகளில் காயத்ரி ஜோஷி மீண்டும் இடம் பிடித்தார். யாரோ ஒருவர் தனது அட்டை விவரங்களைத் திருடி, பின்னர் பணத்தை எடுப்பதற்காக அதை நகல் எடுத்ததாக புகார் அளித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் கணவர் விகாஸ் ஓபராயுடன் இத்தாலியில் வசித்து வருகிறார். அங்கு ஒரு சூப்பர் கார் டூர் நடைபெற்றது. இதில் ஆடம்பரமான கார்கள் அனைத்தும் சாலையில் ஒருபுறத்தில் அணிவகுத்து சென்றது.
இதில் காயத்ரி மற்றும் விகாஸ் இருவரும் லம்போஹினி காரில் பயணம் செய்தனர். அவர்களது காரை ஃபெராரி கார் ஒன்று முந்தி செல்ல முயன்ற போது, சாலையில் பக்கவாட்டில் பயணித்த வேனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகை காயத்ரி ஜோஷி மற்றும் விகாஸ் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் ஃபெராரி காரில் பயணித்த தம்பதியினர் இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து பேசிய காயத்ரி ஜோஷி, “நானும் விகாஸும் இத்தாலியில் இருக்கிறோம். நாங்கள் இங்கே ஒரு விபத்தை சந்தித்தோம்.. கடவுள் அருளால் நாங்கள் இருவரும் நலமாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பற்றிய விக்கிப்பீடியா தகவலில் காயத்ரி இறந்து விட்டதாக சிலர் மாற்றியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.