பாலிவுட் தாண்டி உலக அரங்கில் எண்ணற்ற மக்களை ஈர்த்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர்  ‘கிங் கான்’, எனக் கொண்டாடப்படும் ஷாருக்கான்.


பாலிவுட் பாட்ஷா


திரையில் தொடங்கி ஆஃப் ஸ்க்ரீன் வரை பிறரை காந்தமென ஈர்த்திழுக்கும் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் ஷாருக்கான், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டின் பாட்ஷாவாகக் கோலோச்சி வருகிறார்.


ஃபாஜி எனும் தொலைக்காட்சித் தொடரில் தொடங்கிய ஷாருக்கானின் திரை வாழ்வு இன்றளவும் திரைத்துறைக்கு வரும் ஒவ்வொரு இந்திய நடிகருக்கும் உத்வேகமூட்டுவதாக அமைந்துள்ளது. 1990ல் தொடங்கி தற்போது வரை நிரந்தர பாட்ஷாவாகக் கோலோச்சி வரும் ஷாருக்கின் ரசிகர்களை தமிழ்நாட்டின் கிராமங்கள் தொடங்கி உலகின் எந்த ஒரு மூலையிலும் பார்க்க முடியும்.


ஒரே இந்திய நடிகர்






 57 வயதாகும் ஷாருக்கானின் ’பதான்’ பட ட்ரெய்லர் பாடல்கள் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்தும் ஒப்பீடின்றி விளங்கும் அவரது நட்சத்திர அந்தஸ்தை நிரூபித்துள்ளன.


இந்நிலையில், பிரபல ஆங்கிலப் பத்திரிகையான எம்பையர் மேகசின் வெளியிட்ட உலகின் ஆல்டைம் 50 சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஒரே இந்தியராக ஷாருக்கான் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.


டென்சல் வாஷிங்டன், டாம் ஹாங்க்ஸ், மார்லன் பிராண்டோ, மெரில் ஸ்ட்ரீப், ஜாக் நிக்கல்சன் மற்றும் பல ஹாலிவுட் ஜாம்பவான்கள் இடம்பிடித்துள்ள இந்தப் பத்திரிகையின் பட்டியலில் ஒரே இந்தியராக ஷாருக்கான் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.


அவரால் முடியாதது இல்லை!


”சுமார் நான்கு தசாப்தங்களாக கடக்க முடியாத சாதனை வெற்றிகளுக்கு அருகில் உள்ளவர், பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர். பெரும் அளவிலான பிறரைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல்,  கலை வாழ்வில் நிபுணத்துவம் இல்லாமல் இதனை செய்ய முடியாது. அனைத்து வகை படங்களையும் எளிதில் செய்யக்கூடியவர், அவரால் செய்ய முடியாது என ஒன்று இல்லை" என்றும் இந்த எம்பையர் மேகசின் குறிப்பிட்டுள்ளது.


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய  ‘தேவதாஸ், ’கரண் ஜோஹரின் ‘மை நேம் இஸ் கான்’, ‘குச் குச் ஹோதா ஹை’, அசுதோஷ் கோவாரிகர் இயக்கிய ‘ஸ்வேட்ஸ்’ (தமிழில் தேசம்) ஆகிய படங்களைக் குறிப்பிட்டுள்ளதோடு, 


2012ஆம் ஆண்டு ஷாருக்கான், கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான ‘ஜப் தக் ஹை ஜான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற அவரது பிரபல வரியையும் குறிப்பிட்டுள்ளது. 


ஷாருக் - தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் நடித்துள்ள பதான் படம் வரும் 2023, ஜனவரி 25ஆம் தேதி வெளியாக உள்ளது. அடுத்தடுத்து அட்லியின் ஜவான், ராஜ்குமார் ஹிரானியின் டன்கி ஆகிய படங்களில் ஷாருக் கான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.