இயக்குநர் அட்லீ, நயன்தாரா, அனிருத், விஜய் சேதுபதி என தென்னிந்தியாவின் டாப் ஸ்டார்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் முதன்முறையாகக் கைக்கோர்த்து ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அதிரடி எண்ட்ரி கொடுக்கின்றனர்.


பரபரக்கும் ஜவான்:


தீபிகா படுகோன், சஞ்சய் தத், யோகி பாபு, சுனில் குரோவர், பிரியா மணி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில், ஷாருக்கானின் மனைவி கௌரி கான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.


இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி ஜவான் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வந்த நிலையில், கடந்த மார்ர்ச் மாதம் ஷாருக் ஜவான் ஷூட்டிங் பணிகளை முடித்தார். தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 


விஜய் சேதுபதியிடம் கற்றுக்கொண்டேன்:


ஏற்கனவே ஜூன் 2ஆம் தேதி படம் வெளியாகும் எனத் தகவல்கள் பரவி வந்த நிலையில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நேற்று படம் வெளியாக உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த அறிவிப்பு வீடியோவில், ஷாருக்கான் முகம் சரியாகத் தெரியாத நிலையில் அவரது ரசிகர்கள் இணையத்தில் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில், ட்விட்டரில் வழக்கம் #askSrk ஹேஷ்டேகில் தன் ரசிகர்களுடன் ஷாருக்கான் கலகலப்பாக உரையாடி அவர்களது பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.


அப்போது, விஜய் சேதுபதியிடம் தான் நிறைய கற்றுக் கொண்டதாகவும், அவர் மிகவும் தன்னடக்கம் கொண்டவர் என்றும் தெரிவித்த ஷாருக், அட்லீ, அனிருத் இருவரும் பாடல்களுக்கு தமிழில் தன்னை வாயசைக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அட்லீ இயக்கிய தெறி, மெர்சல் படங்கள் தனக்கு மிகவும் பிடித்ததாகவும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.


 






போஸ்டரில் ஷாருக்கான் முகம் தெரியாதது குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வந்த நிலையில், ரசிகர்களுக்கென பிரத்யேகமாக ஃபோட்டோ ஒன்றைப் பகிர்ந்து இது குறித்து இயக்குநர், தயாரிப்பாளரிடம் சொல்லிவிடாதீர்கள் என்றும் குறும்பாக ஷாருக் பதிவிட்டுள்ளார்.


சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ஷாருக்கின் பதான் படம் இமாலய வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கியது.


இந்நிலையில், அடுத்ததாக ஜவான் படம் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது. ஷாருக்கான் மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுப்பாரா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.