ஆளுநர் ஆளுநராக இருக்க வேண்டும் அரசியல்வாதியாக செயல்படக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்
கடலூர் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட சின்னகாட்டுசாகை பகுதியில் பாமக பிரமுகர் இல்ல திறப்பு விழாவிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,என்எல்சிக்கு ஆதரவாகவும்,விவசாயிகளுக்கு எதிராகவும் தமிழக அரசு செயல்படுகின்றது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் என்எல்சி தேவையில்லை, என்எல்சிக்கு எதிரான போரட்டத்தில் விவசாயிகள், பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதும், என்எல்சிக்கு எதிராக தீர்மானம் போட்ட ஊராட்சி செயலர்கள் பணியிடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.
உலக முழுவதும் அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் அரசு ஆர்வம் காட்டுவது ஏன்..? என்றும் என்எல்சியால், நீர் நில ஆதாரம் என ஆகியவற்றில் என்ன தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என ஐஐடி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார். மேலும் என்எல்சி விவகாரத்தில் தமிழகத்தின் அழிவுக்கு பாஜகவுடன் திமுக கூட்டணியில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், ஆளுநர் ஆளுநராக செயல்பட வேண்டும், அரசியல்வாதியாக செயல்படக்கூடாது. அவர் சார்ந்த கட்சிகொள்கையை வெளிபடுத்தக்கூடாது. நீதிபதிகள் போன்று ஆளுநர்கள் நடுநிலையாக இருந்து மாநில வளர்ச்சிக்கு முன்னேற்றமாக இருக்க வேண்டும் என்றார்.