சின்னத்திரை இயக்குநர் திருமுருகனின் இயக்கத்தில் வெளியாகி மிகவும் பிரபலமான சீரியல் மெட்டி ஒலி. இந்த சீரியல் நடிகர்கள் என்றால் யாருக்கும் பரீட்சியம் இருக்கிறதோ இல்லையோ 90'ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பரீட்சியம் . தொலைக்காட்சி புரட்சி தொடங்கிய காலக்கட்டத்தில், பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்த முக்கியமான சீரியல்களுள் ஒன்று மெட்டி ஒலி. இந்த சீரியலில் நடித்தவர்களுள் முக்கியமானவர் காயத்ரி சாஸ்த்ரி (சரோ). தற்போது ரோஜா சீரியலில் பலருக்கும் பிடித்த மாமியாராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். நடிகை காயத்ரி சோஷியல் மீடியாக்களில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் சமீப காலமாக தனது கடந்த கால நினைவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக ஷேர் செய்து வருகிறார். அதில் நடிகர் அஜித்துடன்தான் நடித்த பாசமலர்கள் படத்தின் புகைப்படத்தை பகிர்ந்த அவர் , நாங்கள் அனைவரும் சிறந்த நண்பர்கள் என குறிப்பிட்டுள்ளார். நடிகை காயத்ரியின் அண்ணன் வள்ளி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்தவர். அவரின் சிபாரிசின் அடிப்படையில் காயத்ரிக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அஜித், அரவிந்த் சாமி, ரேவதி ,ரகுவரன் என மிகப்பெரிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான பாசமலர்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் - அஜித் இருவரும் ஒரே திரையில் தோன்றிய ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார்.
39 வயதாகும் காயத்ரி சில காலங்கள் மட்டுமே சினிமாவில் நடித்து , வாய்ப்புகள் குறைந்த பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார். அவருக்கு மெட்டி ஒலி பக்கபலமாக அமைந்தது. சின்னத்திரை இயக்குநர் ரவி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காயத்ரி , தனது குழந்தை பிறந்த பிறகு சிறிது காலம் சீரியல்களுக்கு பிரேக் கொடுத்து தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். பல மருமகள்களின் ட்ரீம் மாமியாராக காயத்ரி வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.