கணவரால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகை திவ்யாவுக்கு செவ்வந்தி சீரியல் குழுவினர் இணைந்து சீமந்தம் செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.


செவ்வந்தி சீரியல் ஹீரோயின்:


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி சீரியல்' நடிகை திவ்யாவும், விஜய் தொலைக்காட்சியின் ’செல்லம்மா’ சீரியல் நடிகர் அர்னவும் முன்னதாகக் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து மகிழ்ச்சியாக புகைப்படங்கள் பகிர்ந்து வலம் வந்த இந்தத் தம்பதிக்குள் முன்னதாக சண்டை பூதாகரமாக வெடித்தது.


இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் காவல் துறையில் புகார் அளித்தனர்.  தான் கருவுற்றிருக்கும் சூழலில் அர்ணவ் தன்னை அடித்ததாகவும், வேறு ஒரு சீரியல் நடிகையுடன் அர்னவ் நெருங்கிப் பழகுவதாகவும், அவருக்காக தான் மதம் மாறியதாகவும் திவ்யா முதலில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


திவ்யா - அர்னவ் மோதல்:


அவரைத் தொடர்ந்து கருக்கலைப்பு செய்யும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுகளை திவ்யா முன்வைப்பதாக அர்னவ் காவல் துறையில் புகார் அளித்தார். சின்னத்திரை வட்டாரத்தில் இருவரும் தங்கள் குடும்ப சண்டையால் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்ட அர்னவ்வை அக்.14ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர்.  


முன்னதாக சிறையிலிருந்து அர்னவ் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், மன அழுத்தத்தில் இருந்து வந்த திவ்யா தனது அம்மா - அப்பா குறித்து பகிர்ந்த பதிவு அவரது ஃபாலோயர்களின் கவனத்தை ஈர்த்து ஆறுதல்களைக் குவித்தது.


கண்கலங்கிய திவ்யா:


இச்சூழலில் செவ்வந்தி சீரியல் படப்பிடிப்புத் தளத்தில் திவ்யாவுக்கு சீமந்தம் நடத்தப்பட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது. செவ்வந்தி சீரியலில் நடிக்கும் மற்றொரு நடிகையான சிவன்யா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் கண் கலங்கி உணர்ச்சிப்பெருக்கில் திளைக்கும் திவ்யாவுக்கு செவ்வந்தி சீரியல் குழுவினர் இணைந்து வளையல் அணிவித்து ஆசிர்வாதம் செய்து சீமந்தம் நடத்துகின்றனர்.


 






கடந்த வாரம் தன் பெற்றோர், நடிகர் பூவிலங்கு மோகன், நடிகை ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் இணைந்து மாலை அணிவித்து சீமந்தம் செய்யும் வகையில் வீடியோவை திவ்யா இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


மன அழுத்தத்தில் இருக்கும் திவ்யாவுக்கு செவ்வந்தி சீரியல் குழுவினர் இணைந்து சீமந்தும் நடத்திய இந்த வீடியோ அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.