சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள  'ஜெய் பீம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. குறிப்பாக வன்னியர் சமூகத்தினர் படத்தில் தங்கள் சமுதாயம் குறித்த தவறான தகவல் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சாட்டினர்.


இதனையடுத்து படத்தின் சில காட்சிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டன. இருப்பினும், சூர்யா தங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நஷ்ட ஈடாக 5 கோடி தரவேண்டும் என்றும் பா.ம.க சார்பில் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு  1 லட்சம் கொடுக்கப்படும் என பா.ம.க. நிர்வாகி ஒருவர் கூறினார்.


இந்த நிலையில்தான் பா.ரஞ்சித், வெற்றிமாறன், கருணாஸ் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் அருண்குமார் ராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


 அதில் அவர் , “ஜெய்பீம் படத்தில் சில காட்சிகள் சர்ச்சையாகிருக்கு. நான் இத எங்கேயும் பதிவு பண்ணல. ஆனால் இங்க பதிவு பண்றேன். நானும் ஒரு வன்னியர்தான். ஒரு வன்னியரா என்ன இந்தப் படம் எந்த அளவுலையும் பாதிக்கல. இப்படிப்பட்ட ஒரு நிகழ்வ சூர்யா சார் பதிவு பண்ணதுக்கு என்னோட மிகப் பெரிய சல்யூட்..


இருளர் சமூகத்தினருக்கு ஒரு வாக்காளர் அடையாள அட்டை கூட இல்ல. இது நாம வெட்கப்பட வேண்டிய விஷயம். படத்துல நல்ல விஷயங்கள் நிறைய இருக்கும் போது, குறிப்பிட்ட சில காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு மனசு பாதிக்கப்பட்டால் இது எந்த விதத்தில் நியாயம். ஒருத்தர் சூர்யாவை எட்டி உதைத்தால் 1 லட்சம் கொடுக்கப்படும் என்று கூறுகிறார். சூர்யா நிறைய நல்ல விஷயங்களை முன்னெடுத்து செய்து வருகிறார். அந்த மனசுதான் கடவுள்.” என்று பேசியுள்ளார்.