அறிமுக இயக்குநரான சர்வன், தனது முதல் இயக்கத்தின் மூலம் பல முன்னணி இயக்குநர்களின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2017-ஆம் ஆண்டு ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மரகத நாணயம். Fantasy கலந்த காமெடி படமான இது விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரும்பொறை என்ற பண்டைய மன்னனிடம் இருந்த சபிக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு மரகத நாணயத்தை கைப்பற்ற நினைக்கும் பலரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த படமாக மரகத நாணயம் உருவானது. ஆதி மற்றும் நிக்கி கல்ராணியுடன் மூத்த நடிகர் சங்கிலி முருகன், பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், ட்விங்கிள் என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஆனந்தராஜ். நொச்சிக்குப்பம் ராமதாஸாக நடிகர் முனீஷ்காந்த். எம்.எஸ்.பாஸ்கர், காலி வெங்கட், மைம் கோபி, டேனியல் என்று ஒரு நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர். தனது முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளத்தை இயக்கிய பெருமையை சர்வன் பெற்றார்.
MOLODIST IFF | சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் தேர்வு; மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்!
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார் இயக்குநர், அவர் வெளியிட்ட பதிவில் 'மரகத நாணயம் படத்தின் 2-ஆம் பாகத்தின் கதையை Axess பிலிம் தயாரிப்பு நிறுவனத்தின் டில்லிபாபு சாரிடம் கூறியிருக்கிறேன். அதற்கு முன்பு சத்ய ஜோதி நிறுவனத்துடன் விரைவில் ஒரு படத்தை துவங்க உள்ளேன் என்று அந்த பதிவில் கூறியுள்ளார். மேலும் இவற்றையெல்லாம் விட, கொரோனாவிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்பதே என் பிரார்த்தனைகள்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சர்வனின் அடுத்த படம் குறித்த தகவலும் வெகு சீக்கிரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சர்வன் பணியாற்றவிருக்கும் சத்ய ஜோதி தயாரிப்பு நிறுவனம் புகழ்பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் மூன்றாம் பிறை படத்தின் மூலம் இந்த நிறுவனம் திரையுலகில் கால்பதித்தது. பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம் இறுதியாக தனுஷின் பட்டாஸ் படத்தை தயாரித்தது. தற்போது பிரபல இயக்குநர் கார்த்திக் நரேன் திரைப்படம் உள்பட மூன்று படங்களை தயாரித்து வருகின்றது.