நடிகை ஸ்ரீதேவியின் பிரபலமான பாடலின் முதல் வார்த்தையை தனது படத்தின் பெயராக வைத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் பி.ஆர். தேவராஜ். அவர் இயக்கத்தில் 1988ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் "செந்தூரப்பூவே". இப்படம் வெளியாகி இன்றோடு 34 ஆண்டுகளை கடந்து விட்டது.
பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்த படம்:
தமிழ் பொன்னி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் கேப்டன் விஜயகாந்த், ராம்கி, நிரோஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிசில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது 2.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. 1988ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்கள் மனோஜ்-ஜியான். தமிழ் வெளியான இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் சிந்தூரா பூவு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மேலும் 1992ம் ஆண்டு மல்லிகே ஹுவே எனும் பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது.
விஜயகாந்த் பிடித்த தனி இடம்:
இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விஜயகாந்த் தனது சிறந்த நடிகருக்கான தமிழக மாநில அரசின் திரைப்பட விருதை முதல் முறையாக பெற்றார். நடிகர் கமல் மற்றும் நடிகர் ரஜினி இடையே கடும் போட்டி நிலவிய காலத்திலேயே தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை மக்கள் மனதில் பதிய வைத்தவர் கேப்டன் விஜயகாந்த். படத்தின் நடிக்கும் சூப்பர் ஹீரோக்கள் பெரும்பாலும் கிளைமாக்ஸ் காட்சிகளில் இறப்பது என்பதை ரசிகர்கள் ஏற்று கொள்ளமாற்றார்கள் எனும் நம்பிக்கையை இந்த படம் வெளியான சமயத்திலேயே தகர்த்து எறிந்தவர் நடிகர் விஜயகாந்த்.
அன்றைய இளைஞர்களின் ஸ்மார்ட் ஹீரோ:
நடிகர் ராம்கி தனது வசீகரமான தோற்றத்தால் தனது முதல் படமான "சின்னபூவே மெல்லபேசு" படத்தில் தொடங்கி சீரான ஒரு வளர்ச்சியில் இருந்தவருக்கு "செந்தூரப்பூவே" திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த காலத்து இளைஞர்களுக்கு இவரின் ஹேர் ஸ்டைல் மிகவும் ஃபேவரட்.
செந்தூர பூவே படத்தின் கதை சுருக்கம்:
மாற்றாந்தாயால் மிகவும் மோசமாக நடத்தப்படும் ஒரு இளம்பெண்ணாக நிரோஷாவும் மற்றும் அவளின் ஜோடியான ராம்கியையும் நடித்திருந்தனர். இவர்களை எப்படி நடிகர் விஜயகாந்த் காப்பாற்றுகிறார் என்பது தான் "செந்தூரப்பூவே " படத்தின் கதைக்களம். இப்படத்தில் ஒவ்வொருவரும் தனது சிறப்பான பங்கை அளித்ததது தான் படத்தின் வெற்றிக்கு காரணம்.
ரீல் காதல் ரியல் ஆனது :
எம். ஆர். ராதா வின் மகளும் நடிகை ராதிகாவின் சகோதரியான நடிகை நிரோஷா தனது மூன்று வயதிலேயே தனது அப்பா நடித்த தாலி பெண்ணுக்கு வேலி திரைப்படத்தில் அவரின் மகளாகவே நடித்திருந்தார். செந்தூரப்பூவே திரைப்படம் நிரோஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்தது. இதுவரையில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிரோஷா இப்படத்தில் அவரின் ஜோடியாக நடித்த நடிகர் ராம்கியை காதல் திருமணம் செய்து கொண்டார்.