தமிழ்நாட்டு மக்களின் மிகவும் ஃபேவரட்டான ஆர்ஜேவாக அன்றும் இன்றும் இருந்து வருபவர் மிர்ச்சி செந்தில். மிகவும் பிரபலமான ஒரு ஆர்.ஜேவாக இருந்தவர் நடிகனாக அறிமுகமானது சேரன் நடிப்பில் வெளியான 'தவமாய் தவமிருந்து' திரைப்படம். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களைக் காட்டிலும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வந்தார் நடிகர் செந்தில். விஜய் டிவியில் ஆல் டைம் ஃபேவரட் எவர்க்ரீன் சீரியலான சரவணன் மீனாட்சி சீரியலின் ஹீரோவாக நடித்த செந்திலும் ஹீரோயினாக நடித்த ஸ்ரீஜாவுக்கும் இடையில் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட்டாக இருவரும் ரீல் ஜோடிகளில் இருந்து ரியல் ஜோடிகளாக மாறினார்கள். அவர்கள் இருவரும் தங்களின் 10 ஆண்டுகால திருமண நாளைக் கொண்டாட உள்ள நிலையில், யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தனர். இந்த 10 ஆண்டகால திருமண வாழ்க்கையை அவர்கள் எப்படி கடந்து வந்தனர் என்பது குறித்து பேசி இருந்தனர்.
செந்தில் பேசுகையில் “காதலித்து திருமணம் செய்து கொள்ளும் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படும் அதே சண்டை சச்சரவு என அனைத்துமே எங்கள் வாழ்க்கையிலும் இருந்தது. காதலிக்கும்போது இருக்கும் புரிதல் திருமணத்திற்குப் பிறகு காணாமல் போகும். அது அனைத்தையும் கடந்து வருபவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள்.
எங்கள் இருவருக்கு இடையிலும் பிரச்சினை நடக்கவே இல்லை என்று எல்லாம் நாங்கள் சொல்லவே மாட்டோம். புரிதலில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. ஒரு கட்டத்தில் பிரிந்து விடலாமா என்று கூட யோசித்து இருக்கிறோம். இப்போதும் எங்களுக்குள் சண்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் எங்களின் மகன் தேவ் பிறந்த பிறகு எங்களுக்கு சண்டை போட நேரமில்லை. ரோலர் கோஸ்டர் போல இருந்த எங்களின் வாழ்க்கை கரடு முரடான பாதையில் பயணித்து இப்போது தான் தெளிந்த நீரோடை போல அமைதியாக இருக்கிறது. நாங்கள் இருவரும் சேர்ந்து எங்களுடைய மகனை ரசிக்கிறோம்” எனப் பேசியுள்ளார்.
இது குறித்து ஸ்ரீஜா பேசுகையில் "இருவரும் எக்ஸ்ட்ரீமாக சண்டை எல்லாம் போட்டு இருக்கோம். நான் என்னோட வீட்டுக்கு போறேன் என அடிக்கடி சொல்வேன். ஒரு கட்டத்துக்கு பிறகு மெச்சூரிட்டி வந்த பிறகு பெரிய அளவுக்கு சண்டை இருக்காது. இப்போதும் சண்டை வரத்தான் செய்கிறது. ஆனால் அதை கடந்து ஒரு அன்பு பாசம் என ஏதோ ஒரு மேஜிக் தான் எங்கள் உறவை இணைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு புரிதலா, காதலா அல்லது அதற்கு என்ன பெயர் வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம்” என்றார்.