”ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் உண்மையான பட்ஜெட் இதுதான், முன்னதாக பொய் சொல்லிவிட்டோம்” என இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். 


காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், அடுத்தடுத்து கவனிக்க வைக்கும்படியான படங்களை இயக்கினார். அந்த வரிசையில், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு தனி இடம் உண்டு. 2010-ம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், அழகம் பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர். படம் வெளியானபோது, ஹிட்டாகவில்லை என வகைப்படுத்தப்பட்ட திரைப்படம் பின்நாளில் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்பட்ட படமானது. 10 ஆண்டுகளுக்கு மேலான போதும், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். 


இந்நிலையில், இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஆயிரத்தில் ஒருவன் படம் 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் முடிக்கப்பட்டது. ஆனால், மெகா பட்ஜெட் படம் என்ற பெயர் கிடைக்கும் என்பதற்காக 32 கோடி ரூபாய் பட்ஜெட் என அறிவித்திருந்தோம். பெரிய முட்டாள்தனம்! உண்மையான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பணத்தை படம் வசூலித்திருந்தாலும் சுமாரான படமாகவே பேசப்பட்டது. இனி எந்த சூழலிலும் பொய் சொல்லக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.






ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகி வருவதாக தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து, டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால், பட்ஜெட் பிரச்சனை காரணமாக படம் கிடப்பில் இருப்பதாக தகவல் வெளியானது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவில்லை. செல்வராகவன் தரப்பில், ஆயிரத்தில் ஒருவன் 2 படம் நிச்சயம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சாணிக் காயிதம்'. இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.


இது, செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் படமாகும். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. சாணிக்காயிதன் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் "எல்லா இயக்குநர்களும் சிறந்த நடிகர்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், செல்வராகவன் சார் ஆகச் சிறந்த நடிகர்" எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.


Also Read: World Photography Day: ‛காஸ்ட்லி’ போட்டோகிராபர் அஜித் குமார்... காதல் மன்னனின் கேமரா காதல்!