இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் தனது இளம் வயதிலேயே இயக்குனரானார். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக செல்வராகவன் என்ட்ரி கொடுக்க அதே படத்தின் மூலம் அவரின் சகோதரர் தனுஷும் நடிகராக என்ட்ரி கொடுத்தார். அப்படம் கடும் சர்ச்சைகளை சந்தித்தது.
இரண்டாவது படத்திலேயே கவனம் பெற்றார் :
அடுத்ததாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவான 'காதல் கொண்டேன்' திரைப்படம் ஒரு தலை காதலை மையமாக கொண்டு திரில்லர் ஜானரில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியது. அதே சமயம் தனுஷின் நடிப்பும் பாராட்டை குவித்தது. இன்று தமிழ் சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவுக்கு நடிப்பில் சிறந்து விளங்கும் தனுஷை உருவாக்கியவர் செல்வராகவன் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. அவரின் படைப்புகள் ஒவ்வொன்றும் மிகவும் வித்தியாசமானவை. அவரின் படங்களில் நடிக்கும் ஒவ்வொருவரின் முழுமையான திறனையும் வெளிக்கொண்டு வருவதில் கைதேர்ந்தவர் செல்வராகவன்.
நடிப்பில் இறங்கிய செல்வராகவன் :
இயக்குனராக மட்டுமின்றி சமீபகாலமாக நடிப்பிலும் இறங்கி கலக்கி வருகிறார் செல்வராகவன். பீஸ்ட் படத்தில் தொடங்கிய இவரின் பயணம் நானே வருவேன், பகாசுரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். செல்வராகவனை நடிகராக பார்ப்பதை விடவும் இயக்குனராக பார்க்கவே ஆசை படுகிறார்கள் அவரின் ரசிகர்கள். அந்த வகையில் அவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
விரக்தியில் வெளியிட்ட போஸ்ட் :
சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் இயக்குனர் செல்வராகவன் பல்வேறு விஷயங்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் செல்வராகவன் போஸ்ட் செய்துள்ள பல பதிவுகள் அவரின் தனிமையை உணர்த்தும் விதமாக உள்ளது. அந்த வகையில் தற்போது அவர் போஸ்ட் செய்துள்ள ஒரு ட்வீட் அவரின் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 'அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாக வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாக உள்ளது... எங்கு போய் நட்பை தேடுவேன்" என மிகுந்த கவலையில் அவர் பதிவிட்டுள்ள இந்த போஸ்டுக்கு பலரும் ஆறுதல் கூறி நட்பு கரத்தை நீட்டி வருகிறார்கள். நான் என்னுடைய தனி உலகில் இருக்கிறேன் என இன்ஸ்டாகிராமிலும் போஸ்ட் செய்துள்ளார் செல்வராகவன்.
செல்வராகவனின் இந்த ட்வீட் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அவருக்கு என்ன ஆனது ஏன் இப்படி விரக்தியில் ட்வீட் செய்து வருகிறார் என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.