இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மு.க. ஸ்டாலின் திகழ்கிறார் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 70வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதில் கலந்து கொண்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியதாவது, ” தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார் மு.க.ஸ்டாலின். இந்தியாவை கட்டமைக்க மு.க.ஸ்டாலின் முன் வரவேண்டும். மு.க. ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வரவேண்டும்” எனவும் பேசியுள்ளார்.   


இதற்கு முன்னர்,  எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தப்பின் பிரதமர் தேர்வு குறித்து முடிவு எடுக்கலாம் எனவும் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 70 வது பிறந்த நாளினைக் கொண்டாடுகிறார். இது தொடர்பாக திமுக சார்பில் பிறந்த நாள் கொண்டாட்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், மு.க. ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக வர முடியுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ ஏன் முடியாது? அவரால் ஏன் பிரதமர் ஆக முடியாது? அதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பரூக் அப்துல்லாவின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


 மேலும் அவர் தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியின் தொடக்கமாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு செய்ய முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
 ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்பதே எங்கள் குரலாக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்து அதன் பின்னர் யார் சரியானவரோ அவரை பிரதமராக  தேர்வு செய்வது குறித்து  முடிவு எடுக்கலாம் எனவும் அவர் பேசியுள்ளார். 


“இது ஒரு அற்புதமான ஆரம்பம். ஸ்டாலினும், திமுகவும் இந்திய ஒற்றுமைக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு. இந்தியாவில் உள்ள வேற்றுமை பாதுகாக்கப்பட்டால், ஒற்றுமை பாதுகாக்கப்படும் என அவர் கூறினார்.