இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமான சாணிகாயிதம் படத்தை “ராக்கி” படத்தை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முன்னதாக இந்தப்படத்தின் போஸ்டர்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அந்தப்படத்தின் டீஸரை கீர்த்திசுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
பழிவாங்கும் நோக்கத்தோடு கீர்த்தி சுரேஷ் பேசும் வசனங்களுடன் தொடங்கும் அந்த டீஸர் 1 நிமிடம் 32 வினாடிகள் அளவு ஓடக்கூடியதாக அமைந்திருக்கிறது. 1980 களில் நடக்கும் படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக்கதையில் கீர்த்திசுரேஷூம் செல்வராகவனும் அண்ணன் தங்கை கதாபாத்திரத்தில் நடத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக அண்ணன் செல்வராகவனுடன் சேர்ந்து எதிரிகளை கீர்த்தி சுரேஷ் பழிவாங்குவது போன்ற கதைக்களம் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் பொன்னி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷூம், சங்கையா கதாபாத்திரத்தில் செல்வராகவனும் நடித்துள்ளனர் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப்படம் வருகிற மே மாதம் 6 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வராகவன் தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தப்படத்தை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.