தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்துள்ளதால் இந்தப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்தப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளதாக தெரிகிறது.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ள நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஜூலை 13 ஆம் தேதி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிய நிலையில், ஜூலை 27 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளையொட்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
அதனைத்தொடர்ந்து படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலாக “ வீரா சூரா” பாடல் வெளியானது.
செல்வராகவன் எழுதியிருந்த இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து படத்தில் இருந்து டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் செப் 30 அன்று வெளியாக இருப்பதால், அதற்கு போட்டியாக ‘நானே வருவேன்’ படம் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், தனுஷ் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகவே இருந்தது. இருப்பினும் அது குறித்தான அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ‘நானே வருவேன்’ திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு போட்டியாக அன்றைய தினமே வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் ‘நானே வருவேன்’ திரைப்படம் ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.