சின்னத்திரையில் மிமிக்ரி கலைஞராக நுழைந்து பின்னர் தொகுப்பாளராக முன்னேறி வெள்ளித்திரையில் ஒரு துணை நடிகராக அறிமுகமாகி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து பல நல்ல திரைக்கதை கொண்ட வித்தியாசமான படங்களாகத் தேர்ந்தெடுத்து அதில் தனது திறமையான நடிப்பின் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பின்றி அனைத்து ஏஜ் குரூப் மக்களின் செல்லப் பிள்ளையாக இருந்து வருகிறார். 


சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் மற்றும் அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் 'அமரன்' படத்தில் ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக எஸ்.கே 23 படத்துக்காக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். 


 



 


இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் - சிவகார்த்திகேயன் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருவதுடன் பலதரப்பட்ட செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன.


வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் விஜய் கால்ஷீட் கிடைத்ததால் 'தி கோட்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் முழுவதுமாக முடிவடைந்ததும் சிவகார்த்திகேயனை வைத்து எஸ்.கே 25 படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் சீமான் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.  'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கி வரும் எல்ஐசி படத்தில் சீமான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   


 



இப்படி சிவகார்த்திகேயன் - சீமான் சந்திப்பு குறித்து பல தகவல்களும் பரவி வரும் நிலையில், மறுபுறம் இது குறித்து பிரபலம் ஒருவர் மூலம் அறியப்பட்ட தகவலின்படி அவர்களின் சந்திப்பு நட்பு நிமித்தமானது மட்டுமே என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கிட்டத்தட்ட 8.2 வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியாக வளர்ந்ததை அடுத்து சீமானுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அப்படி வாழ்த்துகையில் சந்தித்துக்கொண்டபோது சீமான் மகன்களுடன் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.