கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பல்வேறு காரணங்களுக்காக இந்தப் படத்தின் மீது பெருமளவிலான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. குறிப்பாக நோலன் இந்தப் படத்தில் ஒரு கிராஃபிக்ஸ் காட்சிகள் கூட பயன்படுத்தாமல் படமாக்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


கனவுகளை நிஜமாக்கும் கலைஞன்


தனது படங்களில் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கிராஃபிக்ஸ் காட்சிகளை தவிர்க்க முயல்கிறார் நோலன். அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கிராஃபிக்ஸ் உருவாக்கப்படும் இன்றைய சூழலிலும், ஒரு காட்சியை முடிந்த அளவிற்கு தத்ரூபமாக எடுக்க விரும்புவதே இதன்பின் இருக்கும் நோக்கம். கிராஃபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்துவதற்கான சூழல் இருந்தும் அதனைத் தவிர்த்து நோலன் உருவாக்கிய முக்கியமான காட்சிகளைப் பார்க்கலாம்.


இன்செப்ஷன்


 






இன்செப்ஷன் படத்தின் கதாநாயகனான டாம் அடுத்தவர்களின் கனவுக்குள் புகுந்து அவர்களின்  நனவிலியில் ஒரு கருத்தை விதைக்கும் திறன் பெற்றவனாக இருக்கிறான். அப்படியாக  படத்தின் வில்லன்களில் ஒருவனான ராபர்ட் ஃபிஷர் என்பவனின் கனவிற்குள் புகுந்து ஒரு கருத்தை  பயணிக்கிறார் கதாநாயகனின் நண்பன்.


அந்நிய நபர்களின் ஊடுருவலைத் தவிர்க்க பல்வேறு இடர்களை அந்த கனவில் உருவாக்குகிறது வில்லனின் நனவிலி. எதார்த்தத்தைப் போல் இல்லாமல் புவியீர்ப்பு சக்தி இல்லாத ஒரு கற்பனையான இடத்தை உருவாக்குகிறான் வில்லன். அந்த இடம் முழுவதும்  நிலையாக  இல்லாமல் ஒரு சுழலைப் போல் சுற்றுகிறது.


இந்தக் காட்சியை கிராஃபிக்ஸ் இல்லாமல் உருவாக்க திட்டமிட்டிருக்கிறார் நோலன். இதற்காக தனியாக அந்தரத்தில் வட்டமாக சுழலும் ஒரு அமைப்பை கட்டமைத்து அதில் நடிகர்களை கையிறுகளுடன் இணைத்து மிதக்கவிட்டு இந்தக் காட்சியை இயக்கினார் நோலன்!


டார்க் நைட்


 







டார்க் நைட் படத்தில் ஜோக்கர் ஒரு பென்சிலை வைத்து ஒரு சிறிய மேஜிக் ஒன்றை செய்துகாட்டுவார். இந்த மேஜிக்கை நினைத்திருந்தால் கிராஃபிக்ஸ் பயன்படுத்தி எளிதாக முடித்திருக்கலாம். ஆனால் இதை நிஜத்தில் செய்துகாட்ட வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்திருக்கிறார் நோலன். அதற்காக தனியாக பயிற்சி கொடுக்கப்பட்டு அந்தக் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.


டன்க்ர்க்


 







போரை மையமாகக் கொண்ட படம் டன்கிர்க். போர் குறித்தான திரைப்படங்களில் முதன்மையாக தேவைப்படுவது மனித வளம். ஆயிரக்கணக்கான ராணுவப்படையினரை ஒவ்வொரு காட்சியிலும் காட்டியாக வேண்டிய தேவை இத்தகையப் படங்களுக்கு இருக்கிறது. இதன் காரணத்தினால் பெரும்பாலானப் படங்கள் பின்னணி கதாபாத்திரங்களை கிராஃபிக்ஸ் செய்துவிடுவதே வழக்கம். ஆனால் நோலன் சற்று மாற்றி யோசிப்பவர் இல்லையா. கிட்டதட்ட 4 லட்சம் படைவீரர் உருவங்களை அட்டையினால் உருவாக்கி அவற்றை ஒவ்வொரு காட்சியில் பின்னணியில் நிற்க வைத்தார் நோலன்.


இண்டர்ஸ்டெல்லர்


 





இண்டர்ஸ்டெல்லார் படத்தில் சோளக்கருது வயல்களின் நடுவே ஒரு வாகனத்தை ஓட்டிச்செல்வார் கதாநாயகன். இந்தக்காட்சி படத்தில் அதிகபட்சம் ஒரு நிமிடம் வரை மட்டுமே படத்தில் இடம்பெறும். ஆனால் இந்த சில நிமிட காட்சிக்காக நோலன் என்ன செய்தார் தெரியுமா? 100 ஏக்கர் நிலத்தில் சோளம் பயிர் செய்து இந்தக் காட்சியை எடுத்து முடித்தார். அந்தக் காட்சி எடுத்துமுடித்தது போக தான் விளைவித்த பயிரை அறுவடை செய்து ஒரு நல்ல தொகைக்கு அதை விற்பனையும் செய்தார்.


டெனட்


 






டெனட் படத்தில் ஒரு விமானம் ஒரு கட்டடத்தில் சென்று மோதும் காட்சி இருக்கிறது. இந்தக் காட்சியை முதலில் மினியேச்சர் என்று சொல்லப்படும் சிறிய மாதிரி வடிவங்களை வைத்து உருவாக்கி அவற்றை கிராஃபிக்ஸ் செய்யவே திட்டமிட்டிருக்கிறார் நோலன்.


ஆனால் இதற்கான செலவு ஒரு நிஜ விமானத்தை விலைக்கு வாங்கும் செலவிற்கு நிகரானதாக இருந்திருக்கிறது. இதன் காரணத்தினால் அதைவிட குறைந்த செலவில் ஒரு விமானத்தை விலைக்கு வாங்கி, அதனை நிஜமாக வெடிக்கச் செய்தார் நோலன். கிராபிக்ஸ் காட்சிகள் பல நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை விட பல மடங்கு அதிக செலவு உடையதாகவும் இருக்கின்றன என்பதால் மாற்று வழிமுறைகளை கையாள்கிறார் நோலன்.