ஒரு படத்தின் போது கெட் அப் மட்டும் மாற்றுவது நடிப்பா என்று எழுதியிருந்தார்கள், ஆனால் அவர்களே இன்று பாராட்டி எழுதியிருக்கிறார்கள் என நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.


‘மிமிக்ரி அடையாள அட்டை’


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவீரன்  திரைப்படத்தின் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 


இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியபோது, நான் இதற்கு முன்பு இணை தயாரிப்பாளராக வேலை செய்த பிரின்ஸ் திரைப்படம் திரையரங்கில் சரியாக போகவில்லை.ஆனால் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் ஈட்டித்தந்த திரைப்படம் ப்ரின்ஸ். நல்லா படம் போகவில்லை என்று தெரிந்தும் அதற்காக தயாரிப்பாளர்களுக்கு ஈடுகட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். மாவீரன் திரைப்படம் இன்று இரவு முதல் லாபத்தை நோக்கி நகர்கிறது” எனப் பேசினார்.


விமர்சித்தவர்கள் பாராட்டுகிறார்கள்


தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது: “எப்போதும் என் படம் நல்லாருக்கும் என்று விமர்சனம் வரும், ஆனால் இந்தப் படத்தில் தான் என் நடிப்பு நல்லாருக்கு என்று விமர்சனம் வந்தது. மிமிக்ரி தான் எனக்கு அடையாள அட்டை. காமெடி தான் எனது அடையாளம். சிறந்த நடிகராக இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட, நல்ல எண்டர்டெயின்மென்டராக இருக்க வேண்டும் என்பது என் ஆசை.


என் படம் ஒன்று வெளியான போது ஒரு பத்திரிகையில் “வெறும் கெட் அப் மட்டும் மாற்றுவது நடிப்பா?” என்று எழுதியிருந்தார்கள், ஆனால் தற்போது ‘வெல் டன்’ என்று அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.


விஜய் சேதுபதி


இதை நான் முழுக்க நல்லதாக எண்ணுகிறேன். படத்தின் கிளைமாக்ஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு காட்சியிலும் கிராபிக்ஸ் இல்லை. அனைத்துமே உண்மையாக நேரலையில் எடுக்கப்பட்டது. 


விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாளாக இருக்கிறது. எனக்கும் அவருக்கும் போட்டியே கிடையாது. நான் அவரை ஒவ்வொரு முறையும் ரசித்துக் கொண்டு இருக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.


50 கோடிகள் வசூல்


கடந்த ஜூலை 14ஆம் தேதி மாவீரன் திரைப்படம் வெளியான நிலையில், முதல் நான்கு நாள்களிலேயே இப்படம் 50 கோடிகள் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மண்டேலா படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.


காமிக்ஸ் வரைபடக் கலைஞராக வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தனக்கு கிடைத்த சூப்பர் பவரை பயன்படுத்தி  எப்படி அரசியல்வாதி மிஸ்கினை எதிர்த்து பிரச்னைகளிலிருந்து மக்களைக் காக்கிறார் என்பதே இப்படத்தின் கதை. இந்நிலையில் இரண்டாவது வார இறுதியிலும் இப்படம் நல்ல வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.