நகைச்சுவை நடிகர் சதீஷ் இரண்டாவது முறையாக கதாநாயகனாக நடித்திருக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.


 நகைச்சுவை நடிகர் சதீஷ்


 சிவா நடித்த தமிழ் படம்  மற்றும்  ஏ.எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் சின்ன சின்ன  கதாபாத்திரத்தில் தோன்றிய சதீஷ் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபல நகைச்சுவை நடிகராக உருவான நடிகர் சதீஷ். டைமிங் காமெடிகளின் மூலம் தமிழ் சினிமாவில் நீண்ட நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து மான் கராத்தே , தாண்டவம், சிகரம் தொடு , நையாண்டி உள்ளிட்ட படங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த சதீஷ் கத்தி திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.


பல்வேறு படங்களில் நடித்து வந்த சதீஷ், அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் நகைச்சுவை நடிகர்களுக்கு நடிகராக நடிக்க வேண்டும் என்கிற ஆசையை தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறதோ என்னவோ. கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தார் சதீஷ்.


நாய் சேகர்


சதீஷ், குக்கு வித் கோமாளி புகழ் பவித்ரா இணைந்து  நடித்து வெளியான படம் நாய் சேகர். கிஷோர் ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. நாய் சேகர் திரைப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சதீஷ் நடித்துள்ள படம்தான் கான்ஜூரிங் கன்னப்பன்.


கான்ஜூரிங் கண்ணப்பன்






சதீஷ் கதாநாயகனாக நடிக்க அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தின் டைட்டிலை ஏ.ஜி. எஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. ஹாரர் காமெடியாக உருவாகும் இந்தப் படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சரண்யா பொன்வண்ணன்  மற்றும் நாஸர் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.


சந்தானத்தின் டிராக்கை பின்பற்றுகிறாரா சதீஷ்


 நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக களமிறங்குவது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. சந்தானம் சூரி யோகிபாபு என  நீண்டுகொண்டே போகும் இந்த வரிசையில் தற்போது சதீஷும் இணைந்துள்ளார். கதாநாயகர்களாக நடிக்கத் தொடங்கியிருக்கும் சதீஷ் நடிகர் சந்தானத்தின் டிராக்கைப் பின்பற்றி செல்வதாகவே தெரிகிறது. தில்லுக்கு துட்டு படங்களின் மூன்று பாகங்கள் சந்தானம் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய  வெற்றிபெற்ற படங்கள். ஹாரர் மற்றும் காமெடி என இரண்டும் கலந்து அமைந்ததே இந்தப் படங்களின் வெற்றிக்கு காரணம். அதே வழியை பின்பற்றி தற்போது ஹாரர் காமெடி படமான கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் நடித்துள்ளார் சதீஷ்.