எந்த காலம் ஆனாலும் நகைச்சுவை திரைப்படங்களுக்கு என்றுமே மவுசு அதிகம். சீரியஸான கதை, அதிரடி, திரில்லர், ஆக்சன் படங்களை காட்டிலும் நகைச்சுவை படங்களை தான் அதிகமான ரசிகர்கள் விரும்புவர்கள். அதிலும் நம்முடைய ஃபேவரட் நகைச்சுவை நடிகர்களாக இருந்தால் இன்னும் குஷி தான். 


 


பூதத்தை வைத்து திரைப்படம்:


அப்படி 1990ம் ஆண்டு வெளியான முழுநீள நகைச்சுவை திரைப்படம் தான் "சாத்தான் சொல்லைத் தட்டாதே". ராமநாராயணன் இயக்கத்தில் புலவர் புலமைப்பித்தன் தயாரிப்பில் வெளியான இப்படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டன. ஒரு பூதத்திற்கும் மூன்று ஏழை அப்பாவிகளுக்கும்  இடையில் நடக்கும் ஸ்வாரஸ்யமான நிகழ்வுகள் தான் படத்தின் கதைக்களம். 


 


 



 


நாதஸ் என்றுமே நாதஸ் தான்:


இப்படத்தில் நகைச்சுவையான ரியாக்ஷன் கொடுப்பதில் வல்லவரான நடிகர் செந்தில் சாத்தனாக நடித்திருந்தார். இப்படம் அவரின் திரை வாழ்வில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. பொதுவாகவே அவர் அனைத்து படங்களிலும் கவுண்டமணியிடம் அடி வாங்கும் கதாபாத்திரமாகவே மக்களின் மனதை ரசிக்க வைத்தவர் தனது தனித்துமான நடிப்பால் இப்படத்தில் ஸ்கோர் செய்தார். அந்த மூன்று ஏழைகளாக பாண்டியன், சந்திரசேகர் மற்றும் ஜனகராஜ் நடித்திருப்பார்கள். படத்தின் கதாநாயகியாக கனகாவும் அவரின் அப்பா அம்மாவாக எஸ்.எஸ். சந்திரனும் - கோவை சரளாவும் நடித்திருந்தார்கள். இவர்களின் நகைச்சுவைக்கும் பஞ்சம் இல்லை. இவர்களோடு இளவரசன் மற்றும் கே.கே. சுந்தரும் நடித்திருந்தனர். படத்தின் திரைக்கதைக்கு சொந்தக்காரர் ராம நாராயணன். 



சாத்தான் செய்த அதிசயம் :


அலாவுதீன் அற்புத விளக்கில் இருந்து பூதம் வருவது போல் இப்படத்தில் வயலினில் இருந்து பூதம் கிளம்புகிறது. பூதமாக நடிகர் செந்தில் தோற்றமே நமக்கு சிரிப்பு சிரிப்பாக இருக்கும். சாத்தையா என அவருக்கு பெயிரிடுகிறார்கள். வயலினில் இருந்து தன்னை விடுவித்ததால் அந்த மூன்று ஏழைகளுக்கும் மாயாஜால வித்தைகள் மூலம் வேண்டிய உதவிகளை செய்கிறார் சாத்தையா. திடீர் பணக்காரர்களாகும் மூவரும் ஒரே ஹீரோயின் கனகா மீது காதல் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் இடையில் பல தகராறுகள் ஏற்படுகிறன்றன. அந்த பிரச்சனையில் இருந்து மூவரும் மீண்டும் ராசி ஆனார்களா? கனகாவை எந்த ஹீரோ மணந்தார்? சாத்தையாவின் நிலைமை என்ன ஆனது என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.  


அம்புலி மாமா கதை :


தமிழ் சினிமாவின் அம்புலி மாமா என செல்லமாக அழைக்கப்படுபவர் இயக்குனர் ராம நாராயணன். அந்த கால குழந்தைகளின் ஃபேவரட் இயக்குனர். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற கார்ட்டூன் நட்சத்திரங்களை பார்த்து அதிசயித்த குழந்தைகளுக்கு குரங்கு, பாம்பு, யானை, நாய் என மிருகங்களுக்கு ஒரு பெயர் வைத்து படத்தின் ஒரு கதாபாத்திரமாக உருவாக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் ராம நாராயணன். மிருகங்களை வைத்து மட்டுமல்லாமல் மாயா , பாளையத்தம்மன், ராஜகாளியம்மன் போன்ற தெய்வீக படங்களையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 125க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர்.