டூரிஸ்ட் ஃபேமிலி 

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி டிராமா திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார் , சிம்ரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யோகி பாபு , எம்.எஸ் பாஸ்கர் , மிதுன் ஜெய் , பக்ஸ் பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எம்.ஆர்.பி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழகத்தில் குடிபெயரும் ஈழத் தமிழ் குடும்பத்தை மையமாக வைத்து காமெடி டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் மே 1 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தை பார்வையிட்ட மேயாத மான் பட இயக்குநர் ரத்னவேல் விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்

டூரிஸ் ஃபேமிலி படம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் இப்படி கூறியுள்ளார் " டூரிஸ்ட் ஃபேமிலி ஒரு செம கிளாஸான படம். படம் முழுவதும் குபீர் என்று சிரிக்கும் தருணங்களும் உணர்ச்சிவசமான தருணங்களும் நிறைந்திருக்கின்றன. என்னைப் பொறுத்தவை சசிகுமார் சார் நடித்ததில் சிறந்த படம் என்பேன். குறிப்பாக இடைவேளைக்குப் பின் வரும் காட்சி பிரமாதமாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த காட்சிக்கு திரையரங்கில் விசில் பறக்கும். அந்த சின்ன பையன் , மூத்த மகன் , சிம்ரன் மேடம் , பக்கத்து வீட்டு வயதான தம்பதி, எதிர் வீட்டு அங்கிள் என இந்த படத்தில் உள்ள எல்லா கதாபாத்திரமும் எனக்கு பிடித்தவர்களாக ஆகிவிட்டார்கள். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் 24 வயதுடைய இளைஞர் ஆனால் நான் அவருக்கு ரசிகனாகிவிட்டேன். இந்த படத்தில் மொத்தம் 6 இடங்களில் தளபதி ரெஃபரன்ஸ் இருக்கின்றன. அதை சரியாக பயண்படுத்தி இருக்கிறார்கள் . ப்ளாக்பஸ்டர் வெற்றிக்கு வாழ்த்துக்கள் ."