கடலூர் மாவட்டம் வடலூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த வியாழக்கிழமை மாணவர்களுக்கு ஈட்டி எறியும் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக 10-ம் வகுப்பு படிக்கும் கிஷோர் (15) என்ற மாணவரின் தலையில் ஈட்டி பாய்ந்துள்ளது. இதில், படுகாயமடைந்த மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பள்ளி மாணவனுக்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பள்ளி சிறுவனை காப்பாற்ற இயலாது மூளைச்சாவு அடைந்து வருவதால் வீட்டிற்கு அழைத்து செல்ல கூறியுள்ளனர். இதனையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைகாக மீண்டும் அனுமதித்த போது சிறுவன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சிறுவனை இழந்த குழந்தையின் தந்தையான திருமுருகன் தனது மகனுக்கு ஏற்பட்ட சம்பவம் மற்ற மாணவர்களுக்கும் ஏற்பட கூடாது என்றும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உரிய மைதானம் இல்லாத காரணத்தாலேயே ஈட்டி தன் மகன் மீது பாய்ந்துள்ளதால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மகனின் நிலையை கண்ட தாய் சிவகாமி, துக்கம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நெய்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவகாமி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிவகாமி, தற்போது மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து வடலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.