நந்தன்
இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் நந்தன். ஸ்ருதி பெரியசாமி , பாலாஜி சக்திவேல் , சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
வணங்கான்குடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியே இல்லாமல் ஆள்கிறது சொம்புலிங்கத்தின் குடும்பம் (பாலாஜி சக்திவேல்). தேர்தலுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும்போதே தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரவிடுகிறார்கள். அப்படி எதிர்த்து போட்டியிட முயற்சிக்கும் நந்தன் என்கிறவர் அடுத்த காட்சியில் கொல்லப்படுகிறார்.
இதே வணங்கான்குடியில் சொம்புலிங்கத்தின் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார் கூல் பானை என்கிற அம்பேத்குமார் (சசிகுமார்)
இந்த வருடமும் தேர்தலில் போட்டியே இல்லாமல் வெற்றிபெற இருக்கும் மகிழ்ச்சியில் சொம்புலிங்கம் இருக்கும்போது அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வந்து சேர்கிறது. வணங்கான்குடி ஊராட்சி ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இனி தான் போடியிட முடியாது என தெரிந்துகொண்ட சொம்புலிங்கம் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை தன் சார்பாக தேர்தலில் போட்டியிட வைக்க முடிவு செய்கிறார். தன் சார்பாக கூல் பானையை நிற்க வைத்து அவனை வெற்றிபெற செய்கிறார்.
பதவி , அரசியல் தன் மக்களின் முன்னேற்றம் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக தன் முதலாளி சொல்வதை மட்டும் செய்கிறார். ஊராட்சி மன்ற தலைவரான பின்னும் தன் மக்களின் சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை அம்பேத்குமாரிடம் பல கேள்விகளை ஏற்படுத்துகின்றன. ஆள்வதற்கு தான் அதிகாரம் தேவை என நினைக்கும் அம்பேத்குமார் வாழ்வதற்கே அதிகாரம் எவ்வளவு முக்கியம் என உணர்ந்து கொள்வதை தான் உணர்ச்சிவசமான ஒரு படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் இரா சரவணன்.
நந்தன் ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளில் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் அதே சமயத்தில் வெளியான லப்பர் பந்து படத்திற்கு பரவலான கவனம் கிடைத்ததால் நந்தன் படத்திற்கு போதுமான கவனம் கிடைக்கவில்லை. இந்நிலையில் நந்தன் திரைப்படம் இன்று அக்டோபர் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடியில் வெளியானப் பின் படத்திற்கு சமூக வலைதளங்களில் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன