திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் இன்று வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், இன்று படம் வெளியான சில நிமிடங்களிலேயே #SarpattaParambarai ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாக ஆரம்பித்துள்ளது.






இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.  பாக்ஸிங் மேடையின் பின்னணியில் மெட்ராஸ் பாக்ஸிங் பரம்பரைகளில் சரிக்கு சமமான சார்பட்டா- இடியப்ப பரம்பரைகளுக்கு இடையே மோசமான ஆங்கில குத்துச்சண்டை போட்டி ஆரம்பமாகிறது என்ற பிண்ணனி குரலுடன் தொடங்கும் படத்தின் ட்ரைலரில் கட்டுமஸ்தான தேகத்துடன் குத்துச்சண்டை வீரராக வரும் ஆரியாவும், கம்பீர நடையும் வெள்ளை உடையுமாக திமுகவின் துண்டுடன் வரும் நடிகர் பசுபதியும், இயக்குநர் பா.ரஞ்சித்தின் அரசியல் பேசும் கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையில். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம்  புரொடக்ஸன்ஸ் கே 9 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இரட்டை சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ்  படத்தின் அதிரடி காட்சிகளை இயக்கியுள்ளனர்.






முன்னதாக ஆர்யா நடிப்பில் உருவான டெடி படமும்   டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியிட்டிருந்தால் நல்ல வசூலை குவித்திருக்கும் என பலராலும் பேசப்பட்ட நிலையில், ஆர்யாவின் அடுத்த படமும் ஒடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. 






குத்துச்சண்டை வீரர் போல இருக்க வேண்டும் என்பதற்காக, கட்டு மஸ்தான தோற்றத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் ஆர்யா. ஆர்யாவுடன் நடித்தவர்களும் இந்தப் படத்தின் கதைக்களம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என கடுமையாக மெனக்கெட்டுள்ளனர். அவ்வபோது வெளியிடப்படும் சார்பாட்டா பரம்பரை புரமோஷன் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூடுதலாக்கின.