சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் பாக்ஸர் கதாபாத்திரத்தில் நடித்த ஆறுமுகம் இன்று (ஜூன்.17) காலமானார். உண்மையான சார்பட்டா பரம்பரைக்காக 80களில் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வந்த பாக்ஸர் ஆறுமுகம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாடிகார்டாகவும் இருந்துள்ளார்.


‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படமாக உருவெடுத்தபோது இவரிடம் அப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கதை கேட்டு குறிப்புகள் பெற்று படத்தை இயக்கினார்.  இப்படம் தவிர, வா குவாட்டர் கட்டிங், ஆரண்ய காண்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பாக்ஸர் ஆறுமுகம், இன்று தன் 68ஆவது வயதில் உயிரிழந்தார்.


மூச்சுத்திணறல் காரணமாக நேற்று (ஜூன்,16) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாக்ஸர் ஆறுமுகம் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  நீண்ட நாள்களாக கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த ஆறுமுகம், நேற்று தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஆறுமுகம், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


இந்நிலையில், முன்னதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆறுமுகத்துக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து திரைத்துறையினரும் அப்பகுதி மக்களும் ஆறுமுகத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.