'சர்தார்' பட டப்பிங்கில் நடிகர் கார்த்தியும் இயக்குநர் பி.எஸ். மித்ரனும் பேசி கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.
இது குறித்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சர்தார் டப்பிங் ... உரையாடல்ஸ் வித் கார்த்தி” என்று பதிவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், மித்ரன், நாயகன் கமல்ஹாசன் மாதிரி பேசிக்காட்டுங்க என்று கார்த்தியிடம் சொல்ல... சுதாரித்துக்கொண்ட கார்த்தி... எங்க நீங்க பேசுங்க என்கிறார்...
உடனே மித்ரன்... இல்ல அங்க இருந்து இன்ஸ்பையர் ஆனது அதான்... என சமாளிக்க... நமக்கு என்ன வருமோ அதை பண்ணுவோம் என்ற கார்த்தி.. "நாலு பேருக்கு நல்லது பண்ணாலும் அதை நாற்பதாயிரம் பேருக்கு தெரியிற மாதிரி பண்ணனும்" என்று பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இரும்புதிரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ சர்தார்’. இந்தப்படத்தின் புகைப்படங்கள், மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. கார்த்தி இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படும் நிலையில் அது ஒரு கதாபாத்திரம் போலீஸ் கதாபாத்திரம் என்பது தெரியவந்திருக்கிறது.
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்தப்படம் இந்த வருட தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே தமிழில் அறிமுகமாகிறார். இந்தப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.