தீபாவளி ஸ்பெஷலாக வெளியான பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படத்தின் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி போட்டியில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகியப்படங்கள் மோதிய நிலையில், இதில் கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெற்றிபெற்றுள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்திருக்கும் சர்தார், இது வரை தோராயமாக 21 கோடி வசூல் செய்திருக்கிறது. படம் வெளியான அன்றைய தினம் பிரின்ஸ் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸிற்கு பின்னால் சர்தார் இருந்த போதிலும், அடுத்த இரண்டு நாட்களில் சர்தார் வசூலில் முந்தியது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, தமிழில் சர்தார் திரைப்படம் 12.75 கோடியும், தெலுங்கில் 6 கோடியும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் வெளியான அன்றைய தினம் 2.60 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து அந்தப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற நிலையில் படம் தமிழ்நாட்டில் 50 கோடி வசூல் செய்தது.
இந்திய அளவில் சர்தார் வசூலித்த வசூல்
வெள்ளிக்கிழமை - 6 கோடி
சனிக்கிழமை - 7 கோடி
ஞாயிறு - 8 கோடி
மொத்தம் - 21 கோடி
பிரின்ஸ் திரைப்படத்தை பொருத்தவரை, தமிழகத்தில் 12.25 கோடியும், தெலுங்கில் 3.25 கோடியும் வசூல் செய்திருக்கிறது.
இந்திய அளவில் பிரின்ஸ் வசூலித்த வசூல்
வெள்ளிக்கிழமை - 6.50 கோடி
சனிக்கிழமை - 5.25 கோடி
ஞாயிறு - 4 கோடி
மொத்தம் - 16.50 கோடி
தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக இந்த வரும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும், கார்த்தியின் சர்தார் படமும் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியானது. காமெடி-காதல் படமாக உருவான ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை மரியா நடிக்க, சத்யராஜ் ஹீரோவின் அப்பாவாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த இந்தப்படம், ரிலீஸான முதல் நாளில் இருந்தே, பெரிய அளவில் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சிலர், “சிவகார்த்திகேயனுக்கு காமெடி சென்ஸ் நன்றாகத்தான் உள்ளது. அதற்கென்று எல்லாப் படங்களையும் அதே போலவா தேர்வு செய்வது?” என்று ஆதங்கத்துடன் கேள்வியெழுப்புகின்றனர். படத்தில் சிவகார்த்திகேயனின் காமெடி, நடனம் மற்றும் பாடல்களை தவிர வேறு ஒன்றும் பேசப்படும் வகையில் இல்லை என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். சிவகார்த்திகேயனுக்கு முதன்முறையாக நேரடி தெலுங்குத்திரைப்படமாகவும் வெளியான இந்தப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கி இருந்தார்.
கொரொனா காலங்களுக்கு முன்பே சர்தார் படத்தின் பணிகள் தொடங்கி விட்டன. நல்ல நடிப்புக்கு பெயர் போன நடிகர் கார்த்தி, இப்படத்தில் பல கெட்-அப்புகளில் நடித்துள்ளதாலும், பல்வேறு லொக்கேஷன்களில் படம் படம்பிடிக்க பட்டதாலும், மக்களின் மத்தியில் இப்படத்திற்கு பலத்த் எதிர்பார்ப்புகள் எழுந்தது. ரசிகர்களின் பல நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு இப்படம் நேற்று வெளியானது. சிலர், படம் ஓகே, சுமார் என்றும் கூற, சிலரோ படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டி தள்ளுகின்றனர். இந்தப்படத்தை இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார்.