ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமார், சரவணபவன் ராஜகோபாலன் ஒரு காலத்தில் செய்தித்தாளை விரித்தாலே இந்தப் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். டீக்கடை தொடங்கி சரவணபவன் மேஜை வரை ஜீவஜோதி வழக்கைப் பற்றி கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.


அப்படி என்ன வழக்கு என புதிதாகக் கேட்பவர்களுக்காக இந்த முன் கதை:


சரவணபவன் உரிமையாளார் ராஜகோபாலன். இவருக்கு ஜோதிடத்தில் அதீத நம்பிக்கையுண்டு. ஏதோ ஒரு ஜோதிடர் தொழில்வளத்தைத் தக்கவைத்துக் கொள்ள மூன்றாவது திருமணம் செய்துகொள்ளுமாறு ஐடியா கொடுத்துள்ளார். அப்போதுதான் தன் கடையில் மேலாளராக இருந்த ராமசாமியின் மகள் ஜீவஜோதி அண்ணாச்சியின் கண்ணில் பட்டார். அண்ணாச்சிக்கு ஜீவஜோதியின் மீது காதல் வந்தது. ஆனால், ஜீவஜோதிக்கோ பிரின்ஸ் சாந்தகுமார் மீது காதல்.


இளம் காதலர்கள் சிட்டாய்ப் பறந்து திருமணம் செய்துகொண்டனர். ராஜகோபால் அண்ணாச்சிக்கோ கோபம் கண்ணை மறைத்தது. கொடைக்கானல் சென்ற இளம் ஜோடியை கூலிப்படையை ஏவி பின்தொடர்ந்தார். அங்கே, பிரினிஸ் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை அண்ணாச்சி தான் செய்தார் என்று ஜீவஜோதி வழக்கு தொடர்ந்தார்.  சென்னை செஷன்ஸ் நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டுச் சிறை தண்டனை விதித்தது.இதை எதிர்த்து ராஜகோபால் மேல் முறையீடு செய்தார். அதில் பத்து ஆண்டுச் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி பரபரப்பு தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார் ராஜகோபால். அங்கும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதுடன், உடனடியாக தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்தநிலையில், உடல்நிலைக் குறைபாட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த ராஜகோபால் 2019-ல் உயிரிழந்தார்.
இதுதாங்க அந்த கொலைக் கதை.


இப்போது அந்தக் கொலைக் கதையை களமாகக் கொண்டு திரைப்படம் உருவாகவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதுவும் பெரிய ஹீரோக்களைக் கொண்டு எடுக்கும் படம்போல் ரூ.150 கோடி பட்ஜெட் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஜீவஜோதியும் தயாரிப்பு நிறுவனமும் ஒரு நல்ல நாள் பார்த்து கையெழுத்திட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், ஜீவஜோதியோ, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமோ இதுவரை எதையும் உறுதி செய்யவில்லை.


இப்போ என்ன செய்கிறார் ஜீவஜோதி?
தற்போது தஞ்சாவூர் எல்ஐசி காலனியில் தனது இரண்டாவது கணவர் தண்டபாணி, மகனுடன் வசித்துவருகிறார் ஜீவஜோதி. தையற் தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். அதுமட்டுமல்லாது தனது அப்பா ராமசாமி நினைவாக அவர் பெயரிலேயே  வல்லம் அருகே  அசைவ ஓட்டல் ஒன்றையும் நடத்திவருகிறார்.


புது வாழ்க்கை தொழில் என எல்லாம் இருந்தாலும் ராஜகோபாலன் ஒரே ஒரு நாள் கூட சிறைக்குச் செல்லாமலேயே இறந்துபோனது தனக்கு நீதி கிடைக்காதது மாதிரியான உணர்வையே தருவதாக அவர் புலம்புகிறார். பணமும், அரசியல் செல்வாக்கும் கொண்டு நீதியை தாமதப்படுத்தி, சட்டத்தை வளைத்து சிறைத்தண்டனையிலிருந்து ராஜகோபாலன் தப்பித்துவிட்டதாக அவர் கூறுகிறார்.