மறைந்த நடிகர் சரத் பாபுவின் உடலுக்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.
ரஜினிகாந்த் அஞ்சலி:
நடிகர் சரத் பாபு உடல்நலக்குறைவால் நேற்று காலமான நிலையில், அவரது உடல் சாலை மார்க்கமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, தியாகராய நகரில் உள்ள சரத் பாபுவின் இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் நேரில் வந்து, சரத் பாபுவின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
கோபப்பட்ட ரஜினி:
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, உதவியாளர் ஒருவர் வெயில் காரணமாக ரஜினிக்கு குடை பிடித்தார். இதை கண்டதும் கோபப்பட்ட ரஜினிகாந்த், எந்த இடத்திற்கு வந்திருக்கிறேன், இங்கு வந்து இப்படி செய்வதா என்று கேட்கும் வகையில் சைகை செய்து, கடுமையாக கோபப்பட்டார். இதையடுத்து அந்த உதவியாளர் உடனடியாக குடையை மடித்து எடுத்துச் சென்றார்.
”சரத் பாபு நல்ல நண்பர்”
இதையடுத்து பேசிய நடிகர் ரஜினி “நான் நடிகன் ஆவதற்கு முன்பாகவே சரத் பாபு அவர்களை எனக்கு தெரியும். நாங்கள் நல்ல நண்பர்கள். ரொம்ப அருமையான மனிதர், நல்ல நண்பர். எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் இருப்பார். அவர் கோபமாக இருந்து நான் பார்த்ததே இல்லை. அனைவருக்கும் தெரியும் நான் அவருடன் சேர்ந்து நடித்த படங்கள் அத்தனையுமே ஹிட். முல்லும் மலரில் இருந்து முத்து, அண்ணாமலை, வேலைக்காரன் எல்லாமே. என் மீது அளவுகடந்த அன்பு பிரியம் கொண்டவர்.
”ரொம்ப நாள் வாழனும்”
நான் சிகரெட் பிடிக்கிறதைப் பார்த்து எப்போதுமே நிறைய வருத்தப்படுவார். சிகரெட்டை நிறுத்து, உடம்பை கெடுத்துக்காத, ரொம்ப நாள் வாழனும்னு சொல்வாரு. நான் சிகரெட் பிடிச்சிட்டு இருந்தா, பிடுங்கி தூக்கி கீழ போட்டு அனைச்சிருவாரு. இதனால, அவரு முன்னாடி நான் சிகரெட்டே பிடிக்க மாட்டன்.
”தம் அடிக்க சொன்ன சரத் பாபு”
இந்த அண்ணாமலையில் நீங்க பாத்து இருப்பிங்க, ஒரு பெரிய டயலாக், அவரு வீட்ல வந்து சவால் விட்ற டயலாக். 10, 12 டேக் ஆகிருச்சு ஆனாலும் சரியா ஒகே ஆகல. எமோஷன்ஸ் சரியா வரல. அப்ப சரத் பாபு பக்கத்துல வந்து, ”ரஜினி கூச்சோ இக்கடா அப்பிடினு சொல்லிட்டு ஏ சிகரெட் தீசுகோரண்டி அப்டின்னு சொல்லி, சிகரெட் தாகுன்னு” சொன்னார். அவரே பத்த வைச்சார். அந்த சிகரெட் பிடிச்சதுக்கு அப்றம் ரிலாக்ஸா அந்த டேக் ஓகே ஆச்சு. அவரோட அன்புக்காக இத சொல்றன். நீ ஹெல்த பாத்துக்கோ நல்லா இருக்கனும்னு சொல்றவரு, இப்ப இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு. ரொம்ப நல்ல மனிதர், அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்” என ரஜினி கூறினார்.