தமிழ் சினிமாவில் சில படங்கள், சில பாடல்கள், குறிப்பிட்ட நாளை குறிக்கும் அல்லது போற்றும் அடையாளமாக இருக்கும். அந்த வகையில், பூஜை விடுமுறை நாட்கள் எனப்படும், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தினங்களில் டிவி சேனல்களில் கட்டாயம் இடம் பெறும் படம், சரஸ்வதி பூஜை.


பிரம்மா, விஷ்ணு, சிவன் எப்படி முப்பெரும் தேவர்களோ, அதே போல், அவர்களது துணைவியர்களான சரஸ்வதி, லெட்சுமி, பார்வதி ஆகியோர் முப்பெரும் தேவிகள். சரஸ்வதி கல்விக்கு உடையவள், லெட்சுமி செல்வத்திற்கு உடையவள், பார்வதி வீரத்திற்கு உடையவள் என்கிறது வழிபாட்டு முறை. 


முப்பெரும் தேவிகளுக்குள் போட்டி வந்தால், மோதல் வந்தால் என்ன ஆகும், என்ன நடக்கும் என்பதை புராண காவியமாக கூறியிருக்கும் படம் தான், சரஸ்வதி சபதம். கல்வியா? செல்வமா? வீரமா? உலகில் எது உயர்ந்தது, என்கிற போட்டி முப்பெரும் தேவிகளுக்குள் வர,பூமிக்கு வரும் அவர்கள், வாய் பேச முடியாதவரை புலமை பெற்றவராக மாற்றுவது, பிச்சையெடுப்பவரை ராணி ஆக்குவது, கோழையை மாவீரன் ஆக்குவது என மூன்று வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபடும் முப்பெரும் தேவிகள், அதற்காக மேற்கொள்ளும் திருவிளையாடலும் தான் கதை.






சிவாஜி கணேசன் என்கிற மாபெரும் கலைஞனுக்கு பெருந்தீனி போட்ட படம். நடிகையர் திலகம் சாவித்திரி, கே.ஆர்.விஜயா என பெரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கதையோடு பயணித்து படத்தை பலமாக்கியிருப்பர். கே.வி.மகாதேவனின் இசையில் அத்தனை பாடல்களும், இன்றும் சூப்பர் டூப்பர் ஹிட். அனைத்து பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பார். 


ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் சார்பில், ஏ.பி.நாகராஜன் தயாரித்து, இயக்கிய இத்திரைப்படம், 1966 ம் ஆண்டு செப்டம்பர் 3 ம் தேதி இதே நாளில் வெளியாகி, வெள்ளித்திரையில் வசூல் சாதனை படைத்தது. 







  • ‛அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி...’

  • ‛தெய்வம் இருப்பது எங்கே... அது இங்கே... வேறு எங்கே’

  • ‛கல்வியா செல்வமா வீரமா... ஒன்றில்லாமல் மற்றொன்று...’

  • ‛கோமாதா எங்கள் குலமாதா...’

  • ‛ராணி மகாராணி... ராஜ்ஜியத்தின் ராணி...’

  • ‛தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா...’

  • ‛உருவத்தை காட்டிடும் கண்ணாடி...’


இந்த பாடல்கள் அனைத்துமே, சரஸ்வதி சபதத்தின் மெகா வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. சரஸ்வதி சபதம் படத்தின் தாக்கத்தால் சமீபத்தில் நவீன சரஸ்வதி சபதம் என்கிற படம் வெளியானது. அந்த அளவிற்கு காலத்தை கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்தும் படம். 56 ஆண்டுகளுக்கு முன் இன்று இதே நாளில் வெளியான இத்திரைப்படம், அன்று தியேட்டர்களில் எப்படி கொண்டாடப்பட்டிருக்கும், கொஞ்சம் கண்ணை மூடி கற்பனை செய்து பாருங்கள்!