தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரண்யா. அதன் பின்னர் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது அம்மா நடிகை என்றாலே அவர் நடிச்சால் தான் சரியா இருக்கும் என பெயர் எடுத்துவிட்டார் சரண்யா பொன்வண்ணன். அப்படி தமிழ் சினிமாவில் அதிக அளவிலான படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிலும் எம்டன் மகன் திரைப்படத்தில் வடிவேலு பரத் நாசருடன் நடித்திருக்கும் ஒரு பிரபலமான காமெடி ஸீன் இன்றளவும் பலரால் ரசிக்கப்படும் ஒரு காட்சி ஆகும். அந்த காட்சியில் வடிவேலு புலம்புவதும், சரண்யா பொன்வண்ணன் உருள்வதும், நாசர் உறுமுவதும், ஒரே அதகளமாக இருக்கும். அந்த காட்சி படமான விதத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் சரண்யா பொன்வண்ணன் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. அவரிடம் நீங்கள் நடிக்க மறுத்த காட்சிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு உடனடியாக அவர் இந்த சீனை ஞாபகப்படுத்தினார்.



அது குறித்து அவர் பேசுகையில், "கீழே நடு ரோட்டில், வெயிலில் உருள சொன்னார்கள், உருள்வது மட்டுமல்ல, இந்த காட்சியே நான் பண்ண மாட்டேன் என்றிருந்தேன்… இந்த காட்சியில் நடுத்தெருவில் அவ்வளவு பேர் சுற்றி நிற்க உண்மையாகவே வெறும் மண் தரையில் விழுந்து உருள சொன்னார்கள். நான் கண்டிப்பாக முடியாது என்று மறுத்துவிட்டேன். அப்போது டைரக்டர் திருமுருகன் சார் வந்து கெஞ்சி கேக்குறார், நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். எனக்கு ஒரே அவமானமா இருந்துச்சு, நிஜமாவே ஒரு பப்ளிக் ரோட்ல, 12 மணி உச்சி வெயில்ல, கடுப்பா இருந்தது. என்ன ரொம்ப கண்விண்ஸ் பண்ண ட்ரை பண்ணாரு திருமுருகன் சார். அப்போ உடனே வடிவேலு வந்து, 'சரி நான் பண்ணிடறேன், நான் உருள்ற மாதிரி சீன மாத்திடுங்கன்னு,’ சொல்லிட்டு போய்ட்டார். நானும் அப்பாடா… அவரு பண்ராருன்னு சந்தோஷம் ஆகிட்டேன். ஆனா என்ன திருமுருகன் சார் தனியா கூட்டிட்டு போயி, இந்த சீன வடிவேலு பண்றத விட நீங்க பண்ணாதான் மேம் பெருசா ஒர்க் அவுட் ஆகும், அவரு பக்கத்துல நின்னாலே சிரிப்பு வந்துடும், நீங்க பண்ணா தான் இது கரெக்ட்டா வரும் ன்னு சொல்லி புரிய வச்சார். நானும் ரொம்ப கஷ்டப்பட்டு, ஒரே ஒரு தடவ தான் உருளுவேன், அதுக்குள்ள கரெக்ட்டா எடுத்துக்கணும், ரீட்டேக் எல்லாம் கேக்க கூடாதுன்னு சொல்லிட்டேன். சரி சரி ன்னு எடுத்தாங்க.



கீழ உருண்டா புடவை ஏறும்ல, அப்ப விழுறதுக்கு முன்னாடி, பரத்கிட்ட போயிட்டு, புடவையை நீதான்பா பாதுக்கணும், ப்ளீஸ் பரத், ஒரு அம்மா மாதிரி நெனச்சு என் புடவை ஏற ஏற இறக்கி விடணும்ன்னு சொன்னேன், அவன் நான் பாதுக்குறேன் மேம், நீங்க பண்ணுங்க மேம் ன்னு சோப்பெல்லாம் போட்டு பண்ண வச்சாரு. பாவம் அவருதான் முழுக்க முழுக்க அத இழுத்து இழுத்து விட்டுட்டு இருந்தாரு. இந்த விஷயங்கள் எல்லாம் சேர்ந்துதான் நான் வேண்டாம்ன்னு சொன்னேன். ஆனா உண்மையிலேயே சொல்றேன். என்ன அவ்ளோ ஃபோர்ஸ் பண்ணி பண்ண வைக்கலன்னா, அது வேண்டாம் ன்னு டைரக்டர் விட்டிருந்தா, என் லைஃப் டைம்ல பெரிய இழப்பா இருந்திருக்கும்… ஏன்னா என்னோட கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்ல காமெடிங்கற இமேஜ் ஓபன் ஆனதே அதுல தான். அந்த ஒரு உருள்ற சீனுக்காக நான் ஸ்டேட் அவார்ட் வாங்குனேன். ஏன்னா நான் அந்த படத்துல ஒரு நார்மலான ஒரு பயந்த மனைவி, அப்படி இருக்குற என் கேரக்டர மாத்துன சீனே அந்த கோவில் ஸீன் தான். அதற்கு திருமுருகன் சார், வடிவேலு, பரத் இவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும். அந்த விபூதி தொட்டு வச்சது, இதெல்லாம் ஆன்தி ஸ்பாட்ல வடிவேலு கொடுத்த எனர்ஜிதான்." என்றார்.