தமிழ் சினிமாவில் எந்தவொரு பரிந்துரைகளும் இல்லாமல், தனி ஒருவனாக களம் கண்டவர் நடிகர் விஜய் சேதுபதி. வசீகரிக்கும் கண்கள் , பளீச் சிரிப்பு , நம்மில் ஒருவர் போன்ற தோற்றம் கொண்ட விஜய் சேதுபதி அலப்பறை இல்லாத மாஸ் நடிகர். தொடர் முயற்சியும் , அந்த துறையின் மீது ஈடுபாடும் ஆர்வமும் இருந்தால் போதும் , தன் நிலை என்றோ ஒரு நாள் உயரும் என்பதற்கு முன் உதாரணம் விஜய் சேதுபதி. ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து இன்று இந்தியாவின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்திருக்கும் மக்கள் செல்வனின் பிறந்தநாள் இன்று.




 


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்தவர் விஜய் சேதுபதி. 11-வது வயதில் குடும்பத்தோடு சென்னைக்கு இடம்பெயர்ந்த விஜய் சேதுபதியின் பள்ளி, கல்லூரி எல்லாமும் சென்னையில்தான். வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்ற விஜய் சேதுபதி குடும்ப தேவைக்காக அவ்வபோது கிடைத்த வேலையை செய்து வந்தார். பின்னர் மூன்று வருடம் துபாயில் கணக்காளராக வேலை செய்திருக்கிறார். அந்த வேலையில் அதிக நாட்டம் இல்லாத விஜய் சேதுபதி, 2003 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். ஒரு முறை புகைப்படம் எடுப்பதற்காக ஸ்டூடியோ ஒன்றிற்கு சென்ற விஜய் சேதுபதியிடம் , புகைப்படக்காரர்..”தம்பி ..இந்த முகம் போட்டோஜெனிக் ஃபேஸ்... கேமராவுல அழகா தெரியும் “ என கூறியிருக்கிறார். அதன் பிறகு சினிமாவில் நடித்தால் என்ன என்ற எண்ணம் விஜய் சேதுபதிக்கு வந்திருக்கிறது. அதன் பிறகு கலைத்துறையில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக அவ்வபோது கிடைக்கும் பாத்திரங்களில் எல்லாம் நடிக்க தொடங்கினாராம். அந்த கதாபாத்திரங்களும் அவருக்கு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லையாம் , பல ஸ்டூடியோ வாசல்களில் ஏறி இறங்கி அலைந்துதான் அந்த வாய்ப்பினையும் பெற்றதாக தனது கடந்த கால சுவடுகளை சில மேடைகளில் பதிய வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.




அதன் பிறகு மிகச்சிறந்த சினிமா நடிகர்களை உருவாக்கி கொடுக்கும் கூத்து பட்டரையில் ,கணக்காளராக வேலைக்கு சேர்ந்துள்ளார். துபாய் அனுபவம் அவருக்கு கச்சிதமாக கைக்கொடுத்தது. நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்கும் இடத்தில் வேலை என்றால் , கலை தாகம் சேதுபதியை சும்மா விடுமா ? நடிப்புக்கு மிக நெருக்கமாக இருந்து அதனை கற்றுக்கொள்ளவும் ஆரமித்துவிட்டார்.  சில வருடங்களுக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை சிலருக்கு தெரிந்திருக்கும். அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தவர்தான் கார்த்திக் சுப்புராஜ். இவரின் பெரும்பாலான ஷார்ட் ஃபிலிம்ஸில் விஜய் சேதுபதிதான் நாயகன். அந்த சமயத்தில் விஜய் சேதுபதி பெண் என்னும் சீரியல் ஒன்றிலும் நடித்துக்கொண்டிருந்தார். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் விஜய் சேதுபதியின் ஷார்ட்ஃபிலிம் காம்போவிற்கு கிடைத்த வரவேற்புதான் , கார்த்திக் சுப்புராஜின் முதல்  படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக களமிறங்க காரணம். தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் முதல்முறையாக முன்னணி வேடத்தில் நடித்தார். அது சிறந்த தமிழ் படத்திற்கான தேசியவிருதைப் பெற்றது. மக்களால் கவனிக்கப்பட்டவர் ஏனோ, சினிமா துறையினரால் கவனிக்கப்படாமலே இருந்தார். 5 வருட தொடர் போராட்டத்திற்கு பிறகு ஹீரோவாக களமிறங்கிய விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வர தொடங்கியது.


 





பீட்சா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’  ‘சூது கவ்வும்’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என அடுத்த படங்களில் மாறுபட்ட அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்திய விஜய் சேதுபதியை ரசிகர்கள் அங்கீகரிக்க  தொடங்கிவிட்டனர். அதன் பிறகு பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை , விக்ரம் வேதா , ஜூங்கா, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன், சேதுபதி , செக்க சிவந்த வானம் , 96, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார். 90’ஸ் கிட்ஸின் சொல்ல மறந்த காதலை ரீ-கால் செய்ய வைத்தது , 96 ராம் கதாபாத்திரம். திருநங்கையாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.  பொதுவாக ஹீரோ என்றாலே அடுத்தவரின் படங்களில் கெஸ்ட் ரோலில்  நடிக்க மாட்டார்கள் , வில்லனாக நடிக்க மாட்டார்கள் , வயதான கெட்டப்பில் படம் முழுக்க வலம் வர மாட்டார்கள், குறைந்த பஜெட்டில் அறிமுக இயக்குநர்கள் படத்தில் நடிக்க மாட்டார்கள் என்ற கோட்பாடு கோலிவுட்டில் இருந்தது. அது தற்போது மெல்ல மெல்ல தகர்ந்து வருகிறது என்றாலும் , அதனை தொடங்கி வைத்தவர் விஜய் சேதுபதிதான். ரோல் என்னவாக இருந்தால் என்ன ? நடிப்பதற்கு ஸ்கோப்பும் , நல்ல கதையும் இருந்தால் போதும் அவர்களை வாரி அனைத்துக்கொள்கிறார் விஜய் சேதுபதி. காதல் காட்சிகளில் கண்களை குறுக்கியும் , சண்டை காட்சிகளில் கண்களை விரித்தும் அதிரடி காட்டும் விஜய் சேதுபதி இன்றைய தலைமுறை இளசுகள் பலருக்கும் ஃபேவரெட். 




விக்ரம் வேதா திரைப்படத்தில் மாதவனுக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார் . அதன் பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்தார். தற்போது கமல்ஹாசனுக்கும் வில்லனாக நடித்து வருகிறார். கோலிவுட், டோலிவுட் சினிமா கொண்டாடும் நாயகன் விரைவில் பாலிவுட்டிலும் தனது எண்ட்ரியை கொடுக்கவுள்ளார். ஃபேமிலி மேன் இயக்குநர்களுடன் விஜய் சேதுபதி கூட்டணி அமைத்துள்ளார் என்பதும் , விஜய் சேதுபதிக்கு ஏற்கனவே பாலிவுட் நடிகர்களே ரசிகர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுமாட்டுமா நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் , தொகுப்பாளர் என பன்முக அவதாரம் எடுத்தும் இருக்கிறார் விஜய் சேதுபதி.




  பொதுவாக மாஸ் நடிகர்கள் தங்கள் படங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்துவிடுவார்கள். ஆனால் விஜய் சேதுபதி படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ப தொகையை நிர்ணயம் செய்வாராம். வாழு ! வாழ விடு! என்பதுதான் விஜய் சேதுபதியின் கொள்கை என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு , லீ  , எம்.குமரன், நான் மகான் அல்ல, டிஷ்யூம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக  கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த விஜய் சேதுபதி உழைப்பின் சின்னமாக உயர்ந்து இன்று நிற்கிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் சமூக வலைத்தளங்களில், அவருடன் கன்னத்தில் முத்தமிட்டப்படியும் , கட்டியணைத்தபடியும் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.