’லொல்லு சபா’ என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம்  பிரபலமானவர் நடிகர் சந்தானம். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் அவரை சினிமா வரையில் அழைத்து சென்றது. ஆரம்ப காலத்தில் காமெடியானாக களமிறங்கிய சந்தானம் தனது கலாய்க்கும் பாணி நகைச்சுவையால் பலரை கவர்ந்தார். வடிவேலுவின் வெற்றிடமும் சாதகமாக அமையவே சந்தானம், மிக விரும்பப்படும் காமெடி நடிகாரக கொண்டாடப்பட்டார்.


அறிமுக நடிகர்கள் முதல் மிகப்பெரிய நடிகர்கள் வரை சந்தானம் இடம்பிடித்தார். நடிகர்கள் பலரும் காமெடியன்களை சார்ந்தே இருப்பதை கண்ட சந்தானம் நாமும் ஏன் ஹீரோவாக மாறக்கூடாது என எண்ணினார் போலும். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ‘ இனி நடித்தால் ஹீரோதான் ‘ என தீர்க்கமான முடிவெடுத்தார். அதன் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற திரைப்படம் மூலமாக ஹீரோவாக களமிறங்கினார். என்னதான் கதாநாயகனாக வலம் வந்தாலும் ஆக்‌ஷன் படங்களை கையில் எடுக்காமல், தனக்கே உரித்தான  காமெடி பாணி திரைப்படங்களில் மட்டுமே செலக்டிவாக நடித்து வருகிறார்.





இந்நிலையில் சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘டிக்கிலோனா’ இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வெளியீட்டு உரிமையை ஜீ5 பெற்றுள்ளது. படம் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தில் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா  உள்ளிட்ட காமெடி பட்டாளமே நடித்துள்ளனர். சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் இருவரும் நடித்துள்ளனர்.




இது தவிர கடந்த 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்‘ என்ற  திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. படம் 2016-ஆம் ஆண்டே முடிக்கப்பட்டு வெளியீட்டிற்கும் தயாரானது. 2017 ஆம் ஆண்டு படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் வெளியீட்டு தேதி தள்ளிப்போய் கொண்டிருந்தது. இந்நிலையில் படத்தை ஒடிடியில் வெளியிடுவதாக முடிவு செய்தனர். ஆனால் அதுவும்  பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது. இந்நிலையில் மீண்டும் படத்தை ஒடிடியில் வெளியிடுவது என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் சர்வர் சுந்தரம் படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் ஓடிடி தளம் எது என்பது குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.