விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சீரியலான ராஜா ராணி முதல் சீசன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். இந்த சீரியலில் இவரின் ஜோடியாக நடித்த ஆலியா மானஸாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் நடித்து வருகிறார் சஞ்சீவ். தற்போது கயல் சீரியலில் இருந்து அவர் விலகப்போவதாக தகவல்கள் சோஷியல் மீடியா முழுவதும் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 

கயல் தொடரில் இருந்து விலகும் ஹீரோ :

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் பிரபலமான சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் அவரின் ஜோடியாக நடிக்கிறார் சஞ்சீவ். இது ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீரியல் என்றாலும் சஞ்சீவின் நடிப்பையும் ரசிகர்கள் வரவேற்றனர். டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் கயல் சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இப்போது தான் ஹீரோ ஹீரோயின் இடையே காதல் ஒர்க் அவுட் ஆகி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் சஞ்சீவ் சீரியலை விட்டு விலகுகிறார் எனும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இனியா தொடரில் என்ட்ரி கொடுக்கிறாரோ சஞ்சீவ்?

ராஜா ராணி சீரியல் மூலம் ஆலியா மானஸா - சஞ்சீவ் காதல் ரியல் லைஃப்பிலும் ஒர்க் அவுட்டாகி திருமணம் முடிந்து இவர்களுக்கு இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர். ஆலியா மானஸா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். தனது இரண்டாவது பிரசவத்திற்காக ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகினார். குழந்தை பிறந்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'இனியா' சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த சீரியலில் ஆலியாவின் ஜோடியாக நடிப்பதற்காக கயல் சீரியலில் இருந்து விலகி இனியா தொடரில் நடிக்க உள்ளார் சஞ்சீவ் என தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இது வரையில் சஞ்சீவ் தரப்பில் இருந்தோ அல்லது சீரியல் குழுவினர் தரப்பில் இருந்தோ எதுவும் வெளியாகவில்லை. 

துபாயில் நியூ இயர் கொண்டாட்டம் :

தற்போது சஞ்சீவ் மற்றும் ஆலியா மானஸா விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளனர். நியூ இயர் 2023 கொண்டாட்டத்தை துபாயில் கொண்டாட சென்றுள்ளது இந்த தம்பதி. அங்கு எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள் இந்த தம்பதியினர்.