ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற அனிமல் படத்தின் தமிழ் ரீமேக்கில் சூர்யாவை நடிக்க வைப்பேன் என்று இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளார்.


அனிமல்


அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் சர்ச்சைக்குரிய இயக்குநராக பேசப்பட்டவர் சந்தீப் ரெட்டி வங்கா. கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான அனிமல் படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.900 கோடிகளை வசூல் செய்தது. பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். அர்ஜூன் ரெட்டி படத்தைப் போலவே அனிமல் படமும் விமர்சனங்களை எதிர்கொண்டது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் பல பிரபலங்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை கொண்டிருப்பதாக இந்தப் படத்தின் மீது சமூக ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். 


ஆனால், விமர்சனங்களையெல்லாம் கடந்து அனிமல் படம் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்பட ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை வந்திருந்தார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த விழாவின் போது நடிகர் சிவகார்த்திகேயன் சந்தீப் ரெட்டி வங்காவை பாராட்டிப் பேசியது குறிப்பிடத் தக்கது.


அனிமல் பட ரீமேக்கில் சூர்யா






இதே நிகழ்ச்சியில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் அனிமல் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் யாரை நடிக்க வைப்பார் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில், அனிமல் படத்தில் தமிழில் ரீமேக்  நடிக்க சூர்யா தான் பொருத்தமான ஆள் என அவர் தெரிவித்தார். அவரது இந்த பதில் சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அனிமல் படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தை இயக்க இருக்கிறார் சந்தீப். ஹாரர் திரைப்படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. சுமார்  ரூ.250 கோடிகள் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


சூர்யா 43


சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் புறநாநூறு படத்தின் நடித்து வருகிறார். துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா நஸிம் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.