தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வினோதய சித்தம்'. தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்த இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 


 



தெலுங்கு ரீமேக் :


விபத்தில் உயிரிழந்த ஒருவர் தனக்கு சில கடமைகள் இருப்பதால் சில மாதங்கள் அவகாசம் கேட்டு உயிர் பெற்று மீண்டும் வந்து தனது கடமைகளை முடிப்பது போல 'வினோதய சித்தம்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. தெலுங்கில் ரீ மேக் செய்யப்படும் இப்படத்தையும் சமுத்திரக்கனி இயக்குகிறார். பவன் கல்யாண் மற்றும் அவரின் சகோதரியின் மகனான சாய் தரம் தேஜும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 


படப்பிடிப்பு இன்று துவங்கியது :


பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட இப்படத்தின் பணிகள் பல மாதங்களாக தள்ளிப்போனது. பவன் கல்யாண் கால்ஷீட் கிடைக்காதது தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது தான் பவன் கல்யாண் கால்ஷீட் கிடைத்ததால் படப்பிடிப்பு பணிகளை துவங்கியுள்ளனர்.


இன்று தொடங்கும் படப்பிடிப்பு அடுத்த மாதம் வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார் பிரபலமான இயக்குனரான த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். தமிழ் திரைப்படத்தின் திரைக்கதைக்கு தெலுங்கு திரைப்படத்திற்கும் ஏராளமான மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. 


மீண்டும் தெலுங்கில் ரீ என்ட்ரி:


இப்படத்தில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் பவன் கல்யாணம், நடிகர் தம்பி ராமையா நடித்த கதாபாத்திரத்தில் சாய் தரம் தேஜும் நடிக்கிறார்கள். விநோதய சித்தம் திரைப்படத்திற்கு படம் இயக்குவதை காட்டிக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த சமுத்திரக்கனி மீண்டும் இயக்கத்தில் களம் இறங்க உள்ளார்.  நடிகர் நானி நடித்த 'ஜன்டா பை கபிராஜு' திரைப்படத்தை இயக்கிய சமுத்திரக்கனி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தெலுங்கு திரைப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.