என்ன தான் அதிரடி, ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட், திரில்லர், ஃபேண்டஸி கதைக்களம் கொண்ட படங்கள் மக்களை ஆக்ரமித்து இருந்தாலும் இயல்பான படங்களைப் பார்ப்பது அரிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட படங்களுக்காக ஏங்கும் ஒரு கூட்டமும் உண்டு. ஒரு சில சமயங்களில் அத்தி பூத்தது போல இயல்பான ஒரு கதைக்களம் கொண்ட படங்கள் வந்தாலும் அவை ரசிகர்களின் மனதை லயிக்கத் தவறிவிடுகிறது.
அந்த கேட்டகரியில் மிகவும் எளிமையான இயல்பான கதைக்களம் கொண்ட படம் தான் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க கஞ்சா கருப்பு, விஜய் வசந்த், அனன்யா, அபிநயா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மனதை கொள்ளை கொண்ட 'நாடோடிகள்' திரைப்படம். 2008ஆம் ஆண்டு வெளியான இப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. நண்பனின் காதலுக்காக உயிரைப் பணயம் வைத்து பல எதிர்ப்புகளையும் மீறி அவர்களின் காதலை சேர்த்து வைக்கிறார்கள் சசிகுமார் மற்றும் அவரின் நண்பர்கள். அதனால் அவர்கள் பல வகையிலும் இழப்புகளை சந்திக்கிறார்கள்.
திருமணம் செய்து கொண்ட காதலர்கள் சில நாட்களிலேயே காதல் கசந்து பிரிய அவர்களுக்காக பல துயரங்களை அனுபவித்த நண்பர்களின் இழப்புகளை மதிக்காமல் அசிங்கப்படுத்துகிறார்கள். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நண்பர்கள், அவர்களை ஏமாற்றி முட்டாளாக்கிய காதலர்களை பழிவாங்க கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள். இறுதியில் நண்பர்கள் துரோகம் செய்த போலியான காதலர்களை பழிவாங்கினார்களா இல்லையா என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.
நண்பனுக்காகவும் அவனுடைய காதலுக்காகவும் அனைவரும் சேர்ந்து எடுக்கும் முயற்சிகள், அதனால் அவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் பார்வையாளர்களின் மனதை நெகிழ வைத்தது. காதலை சேர்த்து வைப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையையே தொலைத்த சசிகுமார், செவித்திறனை இழந்த பரணி, காலை இழந்த விஜய் வசந்த் என நட்பின் உன்னதத்தை வெளிக்காட்டி இருந்தனர். அநேகமாக இளைஞர்கள் ஏதோ ஒரு இடத்தில் இந்த படத்தை தங்களுடன் இணைத்துக் கொல்வதே படத்திற்கு கிடைத்த வெற்றி.
என்னதான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் கல்யாணம், குழந்தை என தன்னுடைய லைஃபில் செட்டிலான பிறகு நண்பர்களையும் நட்பையும் மறந்து விடுவது யதார்த்தமான ஒன்று என்றாலும் சிரமப்பட்டு கல்யாணம் செய்து வைத்த நண்பனை கல்யாணத்துக்குப் பிறகும் கண்காணித்து கண்டிப்பது நட்புக்கு இயக்குநர் சமுத்திரக்கனி கொடுத்த அடுத்த பரிணாமம். இயல்பான நடிப்பால் அனைவரின் மனங்களையும் வென்றுவிட்ட நாடோடிகள் படம் உண்மையான நட்பு உள்ள வரை போற்றப்படும்.